No polls, no problem for donors: Parties get Rs 648.48 crore of electoral bonds in April: தேர்தல் இல்லாத காலங்களிலும் கூட அரசியல் கட்சிகள் நன்கொடையாளர்களிடமிருந்து தொடர்ந்து நிதியைப் பெற்று வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) தரவுகளின்படி, இந்த ஏப்ரலில் நன்கொடையாளர்களிடமிருந்து 648.48 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை அரசியல் கட்சிகள் பெற்றுள்ளன. இதனையடுத்து, தேர்தல் பத்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட 2018 முதல் 20 கட்டங்களாக பல்வேறு நன்கொடையாளர்களிடமிருந்து மொத்தம் ரூ.9,836 கோடி மதிப்பிலான பத்திரங்களை அரசியல் கட்சிகள் பணமாக்கியுள்ளன.
இந்த பத்திரங்களை விற்க அங்கீகரிக்கப்பட்ட ஒரே வங்கி எஸ்பிஐ மட்டுமே. ஏப்ரல் விற்பனையில், தலா ரூ.1 கோடி மதிப்பு கொண்ட பத்திரங்கள் ரூ.640 கோடிக்கும், தலா ரூ.10 லட்சம் மதிப்பு கொண்ட பத்திரங்கள் ரூ.7.90 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கமடோர் லோகேஷ் கே பத்ரா (ஓய்வு) ஆர்டிஐ மூலம் எழுப்பிய கேள்விக்கு எஸ்பிஐ வங்கி பதில் அளித்துள்ளது. ஏப்ரல் 1 மற்றும் 10 க்கு இடையில் வெளியிடப்பட்ட 20 வது கட்டத்தில், எஸ்பிஐ மொத்தம் 811 பத்திரங்களை விற்றது, அவற்றில் 640 பத்திரங்கள் தலா ரூ.1 கோடி மதிப்புடையவை. இந்த பத்திரங்கள் அனைத்தும் அரசியல் கட்சிகளால் பணமாக்கப்பட்டது.
தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் விதிகளின்படி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 (43 of 1951) பிரிவு 29A இன் கீழ் பதிவு செய்து, கடந்த நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற பொதுத் தேர்தல்களில் பதிவான வாக்குகளில் ஒரு சதவீதத்திற்கும் குறையாத வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சிகள் மட்டுமே தேர்தல் பத்திரங்களைப் பெறத் தகுதியுடையவை.
எஸ்பிஐயின் ஹைதராபாத் பிரதான கிளையில் ரூ.420.98 கோடி, புது தில்லி பிரதான கிளையில் ரூ.106.50 கோடி, சென்னை பிரதான கிளையில் ரூ.100 கோடி, கொல்கத்தா பிரதான கிளையில் ரூ.18 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் பணமாக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ தரவு காட்டுகிறது.
இந்தியாவில் உள்ள இரண்டு அரசு சாரா நிறுவனங்களான (என்ஜிஓக்கள்) காமன் காஸ் (பொது காரணம்) மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) ஆகியவை, 2018 இல் தொடங்கப்பட்ட இந்த திட்டம் சட்டப்பூர்வமானதா என வழக்குத் தொடுத்துள்ளன.
இந்தச் சங்கங்கள், பல விமர்சகர்களுடன் சேர்ந்து, இந்தியாவில் தேர்தல் பத்திரங்களை அறிமுகப்படுத்துவது “ஜனநாயகத்தை சிதைக்கிறது” என்று குற்றம் சாட்டி வருகின்றன. இந்த தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை எதிர்த்து நிலுவையில் உள்ள மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது. தேர்தல் பத்திரங்களை பெறுவதற்கு 23 அரசியல் கட்சிகள் மட்டுமே தகுதி பெற்றுள்ளன.
ADR இன் படி, இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டுமானால், 2018 ஆம் ஆண்டுக்கான தேர்தல் பத்திர திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பத்திர நன்கொடையாளரின் பெயர் தெரியாத கொள்கை நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. மேலும், “தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெறும் அனைத்து அரசியல் கட்சிகளும், ஒவ்வொரு பத்திரம் குறித்த நன்கொடையாளர்களின் விரிவான விவரங்களுடன், கொடுக்கப்பட்ட நிதியாண்டில் பெறப்பட்ட நன்கொடைகளின் மொத்தத் தொகையை தங்கள் பங்களிப்பு அறிக்கையில் தெரிவிக்க வேண்டும்; அத்தகைய ஒவ்வொரு பத்திரத்தின் அளவு மற்றும் ஒவ்வொரு பத்திரத்தின் மீதும் பெறப்பட்ட கிரெடிட்டின் முழு விவரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும்” என்றும் ADR ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நன்கொடையாளர்கள் 2018ல் ரூ.1,056.73 கோடியும், 2019ல் ரூ.5,071.99 கோடியும், 2020ல் ரூ.363.96 கோடியும், 2021ல் ரூ.1,502.29 கோடியும், 2022ல் ரூ.1,862 கோடியும் வழங்கியதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: எல்ஐசி ஐபிஓ விலை குறைப்பு; முதலீடு செய்யலாமா? பலன் எப்படி?
தேர்தல் பத்திரங்கள் நன்கொடையாளர்களால் அநாமதேயமாக (பெயர் தெரியாத நிலையில்) வாங்கப்படுகின்றன. இந்த பத்திரங்கள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்கு செல்லுபடியாகும். இவற்றை நன்கொடையாளர்கள் வங்கியிலிருந்து வாங்கலாம், பின்னர் அரசியல் கட்சி அவற்றை பணமாக்கிக் கொள்ளலாம். வங்கியில் பராமரிக்கப்படும் அதன் நியமிக்கப்பட்ட கணக்கில் டெபாசிட் செய்வதன் மூலம் தகுதியான தரப்பினரால் மட்டுமே இவற்றை பணமாக்க முடியும். ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி மதிப்பிலான பத்திரங்களை எஸ்பிஐ வெளியிடுகிறது.
தற்போது எந்த தேர்தலும் இல்லாதபோது மக்கள் ஏன் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்குகிறார்கள் என்பது அரசியல் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது. முக்கிய அரசியல் கட்சிகள் கூட தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற தொகையை வெளியிடவில்லை. ஆனால், பத்திரங்கள் பொதுத்துறை வங்கி மூலம் விற்கப்படுவதால், எந்த அரசியல் கட்சிக்கு யார் நிதியளிக்கிறார்கள் என்பது அரசுக்கு தெரியவரும், விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.