கொரோனா 4வது அலை உருவாக வாய்ப்பே இல்லை- இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் உறுதி

புதுடெல்லி:

உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் அடுத்தடுத்த அலைகளை உருவாக்கியது. சில நாடுகள் 4வது, 5வது அலைகளை எதிர்கொண்டு படாதபாடு பட்டுக் கொண்டு இருக்கின்றன.

இந்தியாவில் 3 அலை கொரோனா தாக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தியதால் நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

இன்று காலை வரை நிலவரப்படி நாடு முழுவதும் சுமார் 190 கோடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் டெல்லி, மராட்டியம், உத்தரபிரதேசம், அரியானா உள்பட சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. இது ஒமைக்ரான் வகை வைரஸ் என்று தெரியவந்துள்ளது. இந்த வைரசால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படாது என்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

என்றாலும் கொரோனா அதிகரித்து விடக் கூடாது என்பதற்காக பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளன. இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஆய்வு மேற்கொண்டது.

அந்த ஆய்வு தகவல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக கூடுதல் இயக்குனர் சமீரான் வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:-

நாட்டில் சில பகுதிகளில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து உள்ளது. பரிசோதனை குறைந்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டு உள்ளது. இது சாதாரணமாக வந்து போகக் கூடியதுதான்.

தினசரி பாதிப்பு விகிதத்தைதான் கவனத்தில் கொள்ள வேண்டும். பல்வேறு மாவட்டங்களில் தினசரி தொற்று பாதிப்பு அதிகரிப்பது வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே 4வது அலை உருவாக வாய்ப்பே இல்லை. அதற்கான அறிகுறிகளும் நாட்டில் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்… ஜம்மு காஷ்மீர் வனப்பகுதியில் மீண்டும் தீ வைத்த மர்ம நபர்கள்- கிராம மக்கள் அச்சம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.