திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள 2 அணு உலைகளில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
ரூ.39,747 கோடி மதிப்பீட்டில் 3 மற்றும் 4-வது அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் 2017 ஜூனில் தொடங்கின. தற்போதுவரை 65 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன. வரும் 2023 மார்ச்சில் கட்டுமானப் பணிகளை முடித்து, மின்உற்பத்தி தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடுகளால் இப்பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
இந்நிலையில், 3-வது அணுஉலைக்கான 322 டன் எடையுள்ள அழுத்தக்கலன் நேற்று வெற்றிகரமாக நிறுவப்பட்டது. அணுமின்உற்பத்தியின்போது வெளியாகும்அணுக்கழிவுகள் இந்த அழுத்தக்கலனில்தான் முதலில் சேகரிக்கப்படும். கதிரியக்கம் வெளியாகாத அளவுக்கு இந்த அழுத்தக்கலன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அழுத்தக் கலனை நிறுவும் பணிகளை, இந்திய அணுசக்தி கழகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் புவன் சந்திரபதக் கொடிஅசைத்து தொடங்கி வைத்தார். இயக்குநர் (நிதி) எம்.சங்கரநாராயணன், செயல் இயக்குநர் எஸ்.ஜெயகிருஷ்ணன், அணுமின் நிலைய வளாக இயக்குநர் ராஜீவ் மனோகர் காட்போலே, அணுஉலை திட்ட இயக்குநர்கள் சின்னவீரன், சுரேஷ்,1, 2-வது அணுஉலை நிலையஇயக்குநர் ஆர்.எஸ்.சவான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
5 மற்றும் 6-வது அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் ரூ.49,621 கோடி மதிப்பீட்டில் கடந்தஆண்டு ஜூன் மாதம் தொடங்கின. தற்போது, 10 சதவீதப் பணிகள் நிறைவடைந்துள்ளன. 5-வது அணு உலையில் இருந்து 2026-ல் உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டுஇருந்த நிலையில், உக்ரைன் மீதான போர் காரணமாக, ரஷ்யாவில்இருந்து உபகரணங்கள் வருவது தடைபட்டுள்ளது. இதனால், 3, 4, 5 மற்றும் 6-வது அணு உலைகளின் பணிகள் திட்டமிட்ட காலத்துக்குள் முடிவடையாது என தெரிகிறது.