கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதி சுப்பிரமணியம் – தர்மலட்சுமி. இவர்களது மகன் முத்துமாரியப்பன், டிப்ளமோ மெக்கானிக் இன்ஜினியரிங் முடித்துவிட்டு மேற்கு ஆப்பிரிக்கா கேம்ரூனில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
முத்து மாரியப்பனுக்கும், அந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த வால்மி இனங்கா மொசொக்கே என்ற பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களது காதலுக்கு இரண்டு வீட்டிலும் சம்மதம் தெரிவித்தனர்.
கிறிஸ்தவராக இருந்தாலும், “தங்கள் திருமணத்தை இந்தியாவில், பாரம்பர்ய முறைப்படி நடத்த வேண்டும்.” என்று வால்மி விருப்பம் தெரிவித்துள்ளார். அதற்கு அனைவரும் சம்மதம் தெரிவிக்க, ஆப்பிரிக்காவில் இருந்து தனது உறவினர்கள் சகிதம் மணப்பெண் வால்மி கோவை வந்தார்.
நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடந்துள்ளது. இரண்டு வீட்டு உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொள்ள மணப்பெண்ணை பல்லக்கில் வைத்து அழைத்து வந்துள்ளனர்.
பட்டுப்புடவை, பூ, மாலை அணிந்து இந்திய மணப்பெண்ணாகவே மாறினார் வால்மி. பெரியவர்கள் தாலி எடுத்து கொடுக்க வால்மி கழுத்தில், முத்து மாரியப்பன் தாலி கட்டியுள்ளார். பிறகு மாலை மாற்றி, மோதிரம் மாற்றி, மணமேடையை சுற்றி, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து உறவினர்களிடம் ஆசிர்வாதம் பெற்றனர்.
வால்மி மட்டுமல்லாமல் அவரது உறவினர்களும், இந்திய முறைப்படி புடவை, வேஷ்டி, சட்டை அணிந்து திருமணத்தில் கலந்து கொண்டனர்.
“நாங்கள் நினைத்தபடியே, பாரம்பர்ய முறைப்படி திருமணம் நடந்ததில் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது.” என்று மணமக்கள் தெரிவித்துள்ளனர். இவர்களது திருமண படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.