37 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் திருமணம்| Dinamalar

லாஸ் வேகாஸ் : பயணத்தில் தாமதம் ஏற்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாதாதால், நடு வானில் பறந்து கொண்டிருந்த விமானத்திலேயே திருமணம் செய்து கொண்ட அமெரிக்க ஜோடிக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்துகள் குவிகின்றன.
அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ஜெரேமி சால்டா – பாம் பேட்டர்சன். இருவரும் காதலித்து வந்தனர். இவர்கள், லாஸ்வேகாஸ் நகரில் உள்ள தேவாலயத்தில் கடந்த 24ல்திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆனால், அவர்களது விமான பயணங்களில் தாமதம் ஏற்பட்டது. குறிப்பிட்ட நாளில் லாஸ்வேகாஸ் செல்லும் அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானமும் ரத்து செய்யப்பட்டது. திட்டமிட்ட நாளில் லாஸ் வேகாஸ் நகரில் திருமணம் செய்ய முடியாதே என கலக்கம் அடைந்தனர்.

டல்லாஸ் விமான நிலையத்தில் அமர்ந்து இருவரும் சோகத்துடன் பேசிக் கொண்டு இருந்ததை அருகில் இருந்த கிறிஸ் என்ற மற்றொரு பெண் பயணி கேட்டார். அவர், இருவருக்கும் ஆறுதல் கூறி, டல்லாஸ் நகரில் இருந்து லாஸ் வேகாஸ் செல்லும் சவுத்வெஸ்ட் விமானம் ஒன்றில் கடைசி மூன்று இருக்கைகளை ‘ஆன்லைன்’ வாயிலாக உடனடியாக பதிவு செய்தார். ‘ஆன்லைன்’ வாயிலாகவே திருமண உடைகளும் உடனே ஆர்டர் செய்து வாங்கினர்.விமான நிலையத்திலேயே இருவரும் திருமணஉடையை அணிந்து கொண்டனர்.
இருவரும் விமானத்தில் ஏறியதும், விமானி விசாரித்தார். விமானத்திலேயே திருமணம் செய்து கொள்ளப் போவதாக பாட்டர்சன் கூறினார். விமானியும் சம்மதித்து விட்டார். விமான பணிப் பெண் ஜூலி, மணமகளின் தோழியாக மாறினார். பறந்து கொண்டிருந்த விமானத்தில் நடுவானில் 37 ஆயிரம் அடி உயரத்தில் காதல் ஜோடிக்கு திருமணம் நடந்தது. சக பயணியர் வாழ்த்து தெரிவித்து பரிசுகள் வழங்கினர்.

சக பயணியான புகைப்பட கலைஞர் புகைப்படம் எடுத்தார். இந்தப் படங்களை சவுத்வெஸ்ட் விமான நிறுவனம் சமூக வலைதளத்தில் வெளியிட்டது. ஏராளமானோர் அந்த படங்களை பகிர்ந்து, வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.