திருப்பதி:
ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டம், துவாரகா திருமலா மண்டலம், ஜி. கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கஞ்சி பிரசாத் (வயது 58). ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான இவர். ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் வனிதாவின் உறவினராவார்.
நேற்று காலை கஞ்சி பிரசாத்தை 4 பேர் கும்பல் வெட்டி கொலை செய்தனர். இதனால் ஜி.கொத்தபள்ளியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்தநிலையில் மதியம் 2 மணி அளவில் தலாரி வெங்கட்ராவ் எம்.எல்.ஏ, கஞ்சி பிரசாத் வீட்டில் துக்கம் விசாரிக்க காரில் வந்தார்.
எம்எல்ஏ மீது ஆத்திரத்தில் இருந்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் 250க்கும் மேற்பட்டோர் எம்எல்ஏ வந்த காரை முற்றுகையிட்டு உன்னுடைய ஆதரவாளர்கள் தான் கஞ்சி பிரசாத்தை வெட்டி கொலை செய்தனர் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் எம்எல்ஏவை காரிலிருந்து வெளியே இழுத்துப் போட்டு சரமாரியாக தாக்கினர். இதனை சற்றும் எதிர்பார்க்காத எம்.எல்.ஏ. தாக்குதலில் இருந்து தப்பிக்க ஓட்டம் பிடித்தார்.
இருப்பினும் பொதுமக்கள் அவரை விடாமல் துரத்தி சென்று சரமாரியாக தாக்கி வேட்டியை அவிழ்த்து சட்டையை கிழித்தனர்.
சம்பவம் நடந்த இடத்தில் ஒரு சில போலீசார் மட்டுமே இருந்ததால் எம்.எல்.ஏ. மீது தாக்குதல் நடந்ததை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.
ஒருவழியாக எம்.எல்.ஏ.வை மீட்ட போலீசார் அங்குள்ள பள்ளியில் உள்ள அறையில் எம்.எல்.ஏ. வைத்து பூட்டு போட்டனர். இதையடுத்து கூடுதலாக ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டு எம்.எல்.ஏ.வை பலத்த பாதுகாப்புடன் காரில் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட கஞ்சி பிரசாத் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்புவதற்கு போலீசார் ஆம்புலன்சை கொண்டு வந்தனர்.
அப்போது பொதுமக்கள் கொலையாளிகளை உடனடியாக கைது செய்தால் மட்டுமே கஞ்சி பிரசாத் உடலை எடுத்துச் செல்ல அனுமதிப்போம் என கூறி ஆம்புலன்ஸ் வாகனத்தின் டயரில் காற்றை பிடுங்கி விட்டனர்.
ஆளுங்கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்டதால் அந்த கட்சி எம்.எல்.ஏ.வையே பொதுமக்கள் ஓட, ஓட விரட்டி தாக்கிய சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.