கும்மிடிப்பூண்டி முதல் குமரிமுனை வரை சசிகலா சுற்றுப்பயணம் செல்ல தயாராகிறார்

சென்னை:

ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா கடந்த ஆண்டு ஜனவரி இறுதியில் விடுதலை ஆனார்.

பெங்களூரில் இருந்து சென்னை வந்த சசிகலாவுக்கு ஆதரவாளர்கள் வழி நெடுக உற்சாக வரவேற்பு அளித்தனர். சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு அவர் விடுதலையானதால் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இதனை உறுதி படுத்தும் வகையில் சசிகலாவும் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார்.

ஆனால் திடீரென அரசியல் களத்தில் இருந்து அவர் பின்வாங்கினார். இருப்பினும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தி.நகரில் உறவினர் வீட்டில் தங்கி இருந்தபடியே சசிகலா ஆதரவாளர்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார். அ.தி.மு.க.வினருடன் அவர் பேசிய ஆடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறவில்லை. இருப்பினும் வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது. இந்த நிலையில் சசிகலாவிடம் அரசியல் பயணம் எப்போது? என்பது பற்றி நிருபர்கள் அடிக்கடி கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்கு பதில் அளிக்கும் அவர் விரைவில் தொடர் அரசியல் பயணத்தை தொடங்க இருப்பதாக கூறி வருகிறார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பேட்டி அளித்த சசிகலா, ‘ஆன்மீக பயணம் முடிந்ததும் அரசியல் பயணத்தை தொடங்குவேன்’ என்று கூறினார். இதனால் சசிகலாவின் அரசியல் பயணம் எப்போது தொடங்கும்? என்கிற எதிர்பார்ப்பு மீண்டும் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே வருகிற 10ந்தேதி சசிகலா தனது அரசியல் பயணத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தஞ்சையில் வருகிற 10ந்தேதி திருமணவிழாவில் சசிகலா பங்கேற்க உள்ளார். இந்த விழாவில் தனது எதிர்கால அரசியல் திட்டம் பற்றி முக்கிய அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கும்மிடிப்பூண்டி முதல் குமரி வரை’ என்ற பெயரில் சசிகலா சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சுற்றுப்பயணத்தின்போது தினம் ஒரு ஊரில் (மாவட்ட அளவில்) தனது ஆதரவாளர்களை சந்தித்து பேசி சசிகலா திட்டமிட்டுள்ளார்.

இதற்கான பயண திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. சசிகலாவின் இந்த சுற்றுப்பயணத்தின் போது அ.தி.மு.க.வில் அதிருப்தியில் இருக்கும் முன்னணி நிர்வாகிகளை சந்தித்து பேசவும் சசிகலா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்… தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.252 கோடிக்கு மது விற்பனை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.