குடலிறக்க நோயால் பாதிக்கப்பட்ட பாப் பாடகர் திடீர் மறைவு; பாலிவுட் பிரபலங்கள் இரங்கல்

லண்டன்: குடலிறக்க நோயால் பாதிக்கப்பட்ட பாப் பாடகர் தர்சம் சிங் சைனி, திடீரென இறந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரபல பாப் பாடகர் தர்சம் சிங் சைனி (54) கடந்த 2 ஆண்டுகளாக குடலிறக்க நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரது மறைவு ஹாலிவுட் மற்றும் இசை உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பாலிவுட் நடிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னதாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தர்சம் சிங் சைனிக்கு ஹெர்னியா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும், அவருக்கு கொரோனா தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை ஒத்திவைக்கப்பட்டது. இதனால், அவரது உடல்நிலை மோசமடைந்து; கோமா நிலைக்குச் சென்றார். இந்த ஆண்டு மார்ச் மாதம் கோமாவில் இருந்து மீண்ட அவரது உடல்நிலை மெல்ல மெல்ல முன்னேறி வந்தது. ஆனால் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பாலிவுட் பாடகர் பாலி சாகூ வெளியிட்ட பதிவில், ‘சகோதரரின் மறைவுக்கு இரங்கல். நான் உங்களது பிரிவால் மிகவும் துயரமடைகிறேன்’ என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.