`அவனின்றி' ஓர் அணுவும் அசையாது; காணாமல் போகும் டூ வீலர்கள்; கண்டுபிடித்துத் தரும் காவல்துறை!

கடந்த சில தினங்களுக்கு முன்பு, நமக்குத் தெரிந்த நண்பர் ஒருவரின் ஸ்கூட்டர் சென்னையில் திருடு போனது. ஞாயிற்றுக்கிழமையன்று பகலில், `மருத்துவமனை அவரசத் தேவை’ என்று சொல்லி பக்கத்து வீட்டுக்காரர், வாங்கிச் சென்றுள்ளார். இரவு 9 மணியளவில் வண்டியைக் கொண்டுவந்து, வழக்கமாக நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு, மூன்றாவது மாடியில் இருக்கும் நண்பரிடம் சாவியைக் கொடுத்துள்ளார்.

மறுநாள் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு அலுவலகத்துக்குப் புறப்படுவதற்காக மாடியிலிருந்து இறங்கிவந்த நண்பரின் கையில் சாவி இருக்கிறது. ஆனால், வண்டி?

பதறிப்போய், பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்கிறார். `நான் இங்கதானே நிறுத்தினேன். எப்படி காணாம போயிருக்கும்?’ என்று தானும் பதற்றமாகிறார்.

கூடவே, அக்கம்பக்கத்தினரும் சேர்ந்துகொள்ள தெரு முழுக்கத் தேடுகிறார்கள். அக்கம்பக்கத்திலும் தேடுகிறார்கள். சி.சி.டி.வி அவ்வளவாக இல்லாத தெரு. அதனால், கண்டுபிடிப்பது சுலபமாக இல்லை. நொளம்பூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவைத் தருகிறார்கள். வண்டியைத் தொலைத்த நண்பர், மீடியா நிறுவனமொன்றில் வேலை பார்க்கிறார் என்பதுவரை அனைத்தையும் விசாரித்துத் தெரிந்து கொண்ட காவல்துறையினர், ‘கண்டுபிடிச்சுடுவோம்’ என்றொரு பதிலைச் சொல்லியனுப்பிவிட்டனர்&எஃப்.ஐ.ஆர் எதுவும் போடாமல்!

Bike (Representational Image)

திங்கள்கிழமையன்று மாலை வீடு திரும்பிய நண்பருக்கு ஆச்சர்ய செய்தி… `அடுத்த தெருவுல இருக்கிற காலி இடத்துல உங்க ஸ்கூட்டர் கிடக்குதுங்கண்ணா’ என்று, அந்தப் பகுதியைச் சேர்ந்த அறிமுகமான நபர் ஒருவர் நம் நண்பருக்குத் தகவல் சொன்னார். நம்பிக்கையோடு அங்கே ஓடினால்… தரையில் தள்ளிவிடப்பட்டு அனாதையாகக் கிடக்கிறது ஸ்கூட்டர்.

வண்டி முழுக்க உணவு, சரக்கு சாப்பிட்ட கறை, அழுக்கு என நாற்றமடித்துக் கொண்டிருக்க, சாவியைப் போட்டு சீட் பாக்ஸைத் திறந்தார் நண்பர். உள்ளே நீளமான கத்தி ஒன்றைப் பார்த்து சற்றே ஜெர்க் ஆனவர், மீண்டும் நொளம்பூர் காவல் நிலையம் சென்று விஷயத்தைச் சொன்னார்.

“ஓ… கத்திதானே’ என்ற காவலர்கள், அதைக் கையில் எடுத்துக் கொண்டுவிட்டு, `சரி, சரி நீங்க வண்டியை எடுத்துட்டு போங்க ‘ என்று அனுப்பி வைத்துவிட்டனர்.

பெரும்பாலும் வண்டிகள் காணாமல் போனால், சாமானியமாகக் கிடைத்துவிடாது. அப்படித் திரும்பக் கிடைக்கிறது என்றால்… ஒன்று வண்டியைத் தொலைத்த நாம் செல்வாக்கான நபராக இருக்கவேண்டும் அல்லது செல்வாக்கான நபர் யாராவது நமக்காக சிபாரிசு செய்யவேண்டும். இங்கே நண்பரின் வண்டி திரும்பக் கிடைத்தற்கும் காரணம், அவர் பணியாற்றும் மீடியா நிறுவன செல்வாக்காக இருக்கலாம்.

ஆக, அவனின்றி ஓர் அணுவும் அசையாது. அந்த அவன்… போலீஸ்தான்.

2002-ம் ஆண்டில் நடைபெற்ற ஒரு விஷயத்தைச் சொன்னால், இந்தப் பழமொழிக்கான அழுத்தமான அர்த்தம் உங்களுக்கு நன்றாகவே விளங்கும்.

சென்னை, கோடம்பாக்கத்திலிருக்கும் எங்கள் சூப்பர் மார்க்கெட்டுக்கு காய்-கனி கொள்முதல் செய்வதற்காக, கோயம்பேடு வணிக வளாகத்துக்கு இருசக்கர வாகனத்தில் (நண்பர் ஒருவரிடம் கடன் வாங்கிய வண்டி) ஒருநாள் சென்றோம். வாசலிலேயே குத்தகைதாரர் பார்க்கிங் ரசீதை நீட்டினார். காய்-கனி வாங்கிக் கொண்டு திரும்பிவந்து பார்த்தால், நிறுத்திய இடத்தில் வாகனத்தைக் காணவில்லை.

Theft (Representational Image)

‘எனக்குத் தெரியாது. நுழைவுக் கட்டணம் வாங்குவது மட்டும்தான் எங்கள் வேலை. வாகனத்தை உங்கள் பொறுப்பில்தான் வைத்துக் கொள்ளவேண்டும்’ என்று சொல்லி கழன்று கொண்டார், வாகன பார்க்கிங் குத்தகைதாரர்.

வண்டி உரிமையாளருக்கு உடனே தகவல் சொன்னோம். உடனே, மாநகர காவல் துறை அசிஸ்டென்ட் கமிஷனராக (ஏசி) இருக்கும் தன்னுடைய நண்பரின் பெயரைச் சொன்னவர், ‘அவரிடம் பேசிவிடுகிறேன். அவரைப் போய் வீட்டில் பாருங்கள்’ என்று சொன்னார். அப்படியே அந்த ஏசி-யைச் சந்தித்தோம். உடனே கோயம்பேடு காவல்நிலையத்துக்கு போன் செய்து, விவரங்களைச் சொல்லி உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

கோயம்பேடு காவல்நிலையம் சென்றோம். ஏட்டய்யா ஒருவர், ஸ்டேஷன் பின்புறம் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு எங்களை அழைத்துச்சென்றார். அங்கே கிடந்தவை எல்லாமே, போலீஸால் ஏதோ காரணத்துக்காக பறிமுதல் செய்யப்பட்ட அல்லது திருட்டு வாகனங்கள்.

‘இதில் ஏதாவது ஒரு வண்டியை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் வண்டி கிடைத்தபின் போன் செய்கிறோம். வந்து வண்டியை எடுத்துச் செல்லலாம். இப்போதைக்கு வண்டி கிடைத்து விட்டது என்று ஏசி-யிடம் சொல்லிவிடுங்கள்’ என்றார்.

திருட்டு வண்டியை எடுத்துச் செல்ல மனமின்றி, ‘எங்க வண்டி கிடைத்த பின் தகவல் தாருங்கள்’ என்று சொல்லிவிட்டு, புகார் மனுவை எழுதிக் கொடுத்தோம்.

”எதற்கும்… வண்டியைத் தொலைத்த இடத்திலேயே நாளைக்குக் காலையில் வந்து மீண்டும் தேடிப்பாருங்கள்” என்று சொல்லி அனுப்பி வைத்தார் ஏட்டய்யா!

மறுநாள் காலையில் அதே இடத்தில் நின்றிருந்தது எங்கள் வண்டி!

ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நண்பர் ஒருவரிடம் இந்நிகழ்வை சமீபத்தில் பகிர்ந்தபோது… சென்னை, அண்ணா நகரில் வண்டியைப் பறிகொடுத்த கதையைச் சொன்னார்- அதுவும்… ‘அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்கிற பழமொழியை உறுதிப்படுத்துவதாகவே இருந்தது.

ஏ.ஏ.சத்தார்

அண்ணாநகர்-அண்ணா வளைவு அருகே, ஒரு கடை வாசலில் வண்டியை நிறுத்தி பொருள் வாங்கிக் கொண்டு, 5 நிமிட நேரத்துக்குள் திரும்பியிருக்கிறார். அதற்குள் வண்டியைக் காணோம். சுற்றியும் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை என்பதால், அருகிலுள்ள காவல் நிலையம் சென்று புகார் சொல்லியிருக்கிறார். அங்கு இவரை எதிர்கொண்ட அதிகாரியோ… ‘எங்கயாவது நிறுத்த வேண்டியது. அப்புறம் எங்க தாலியை அறுக்கவேண்டியது’ என்று சொல்லி, ஏட்டய்யாவிடம் அனுப்பி இருக்கிறார்.

‘இதே வேலையா போச்சு’ என்று தலையில் அடித்துக்கொண்ட அந்த ஏட்டய்யா… ‘கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட், சென்ட்ரல், எழும்பூர் இங்கல்லாம் இருக்கற இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் போய்ப் பாருங்க’ என போகாத ஊருக்கு வழி சொல்லியிருக்கிறார்.

உடனே, தனக்குத் தெரிந்த ஒரு ஏசி-யின் (அசிஸ்டென்ட் கமிஷனர்) பெயரைச் சொல்லி, ‘காலையில் அவருடைய வீட்டுக்குப் போக வேண்டிய வேலை இருக்கிறது. அப்படியே அவர்கிட்டயும் ஒருவார்த்தை சொல்லிடறேன்’ என்று சொல்ல, சற்றே கலவரமான ஏட்டய்யா, மேற்கொண்டு சில விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, திருட்டுபோன இடத்துக்கு வந்து பார்த்துள்ளார்.

‘எனக்கு வண்டியைப் பத்தி பெரிசா பிரச்னை இல்லை. ஆனா, வண்டி பாக்ஸுல சில டாகுமெண்ட் வெச்சிருந்தேன். அது சம்பந்தமாத்தான் காலை 6 மணிக்கு ஏ.சி-யைச் சந்திக்கணும்’ என்று சொல்லியுள்ளார் நண்பர்.

‘எதற்கும் இரவு 12.30 மணிக்கு வந்து இந்த இடத்துல தேடிப் பாருங்க’ என்றாராம் ஏட்டய்யா!

தலையாட்டியபடியே வீடு திரும்பிய நண்பர், வேண்டா வெறுப்பாக இரவு சென்று பார்த்திருக்கிறார். காணாமல் போன இடத்துக்கு நேரெதிர் திசையில் அவருடைய வண்டி நிறுத்தப்பட்டிருந்தது!

அவனின்றி ஓர் அணுவும் அசையாது!

-ஏ.ஏ.சத்தார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.