புதுடெல்லி,
பிரதமர் மோடி ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
முதலில் ஜெர்மனி செல்லும் பிரதமர், பிறகு அங்கிருந்து டென்மார்க் செல்கிறார். டென்மார்க் பயணத்தை முடித்துக் கொண்டு இறுதியாக அவர் பாரீஸ் வருகிறார். 2-ம் தேதி இரவு ஜெர்மனியிலும் 3-ம் தேதி இரவு டென்மார்க் கிலும் அவர் தங்குகிறார்.
மூன்று நாடுகளிலும் 65 மணி நேரம் செலவிடும் பிரதமர், சந்திப்பு,கலந்துரையாடல், பேச்சுவார்த்தை என 25 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 7 நாடுகளின் 8 தலைவர்களை அவர் சந்திப்பதுடன் உலக தொழில் தலைவர்கள் 50 பேருடன் கலந்துரையாட உள்ளார். வெளிநாடு வாழ் இந்தியர்களையும் அவர் சந்திக்கிறார்.
பிரதமர் மோடியின் இந்த பயணத்தின் முக்கிய நிகழ்ச்சி நிரலில் ’எரிசக்தி பாதுகாப்பு’ குறித்த விவாதம் முக்கியமானதாக இருக்கும் என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.