கடலூர்: வையங்குடி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தின் போது ஊராட்சி செயலரால் வாசிக்கப்பட்ட தீர்மானங்கள் எதுவும் நடைபெறாத நிலையில், தீர்மானப் புத்தகத்தில் கையெழுத்திட மறுத்து, ஊராட்சித் தலைவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வையங்குடி ஊராட்சியின் தலைவர் மனோன்மணி. இவரது தலைமையில், ஊராட்சி செயலர் முரளி முன்னிலையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி செயலர் முரளி, கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும், அதற்கான செலவு விபரம் குறித்து வாசித்து, ஊராட்சியில் மேற்கொள்ளப்படவேண்டிய மக்கள் நலன் சார்ந்த பணிகள் குறித்து வாசித்தார். அப்போது ஆழ்குழாய் கிணறு அமைத்து பாரமரிப்புக்காக சுமார் ரூ.1.38 லட்சம் செலவிடப்பட்டதாக வாசித்தார்.
அப்போது குறுக்கிட்ட கிராம மக்கள் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது, வடிகால் அமைக்கப்படவில்லை, ஆழ்குழாய் அமைத்த கிணறுகளில இருந்து இதுவரை தண்ணீர் விநியோகிக்கப்படாமல், ஏரியிலிருந்து வாய்க்கால் மூலம் வரும் தண்ணீரைத் தான் பருகி வருகிறோம் எனவும், வீடுகளுக்கு இணைக்கப்பட்ட குடிநீர் குழாயிலிருந்து தண்ணீர் வரவில்லை, சாலைகள் மோசமாக உள்ளது, ஊட்டச்சத்து வார விழா நடத்தவே இல்லை என பல்வேறு புகார்களை கூறி, நடைபெறாத பணிகளுக்கு நாங்கள் எப்படி ஒப்புதல் அளிக்க முடியும் எனக் கூறி தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆழ்குழாய் கிணற்றில் புது மோட்டார் போடாமல் பழைய மோட்டரை பொருத்தி பணம் பெற்ற மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே இதற்கு முறையாக விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கையையும் முன்வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், ஊராட்சித் தலைவரின் மகன்களுக்கும், கிராம மக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கை கலப்பாக மாறியது. இதையடுத்து அங்கிருந்த போலீஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதுதொடர்பாக ஊராட்சி செயலர் முரளியிடம் கேட்டபோது, நான் இங்கு பணியிட மாற்றலாகி சில மாதங்கள் தான் ஆகிறது. தனக்கு எதுவும் தெரியாது என்றார். இதையடுத்து ஊராட்சித் தலைவர் மனோன்மணியை தொடர்பு கொண்டபோது, அவரது கணவர் அன்பழகன் பேசினார். அப்போது எல்லாம் செயல்பாட்டில் தான் இருக்கிறது. சிலரது தூண்டுதலின் பேரில் வேண்டுமென்றே பிரச்சனை செய்வதாகக் கூறினார்.
இதனிடையே வையங்குடி ஊராட்சியில் 480 குடும்பங்கள் உள்ள நிலையில், ஊராட்சித் தலைவரின் நடவடிக்கை சரியில்லை எனக் கூறி கிராம சபைக் கூட்டத்தை பெரும்பகுதி மக்கள் புறக்கணித்து, நேற்று நடைபெற்றக் கூட்டம் செல்லாது என அறிவிக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.