புதுடெல்லி,
நாட்டில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. தொழிற்சாலை நடவடிக்கைகளும் கொரோனாவுக்கு முந்தைய கால அளவுக்கு உற்பத்தியை அதிகரித்துள்ளன. இதனால், ஏற்றுமதி, இறக்குமதியும் இயல்பான அளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக ஜி.எஸ்.டி வரி வசூலும் அதிகரித்து வருகின்றது.
கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.1,40,986 கோடி வசூலான நிலையில், பிப்ரவரி மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1.33 லட்சம் கோடியாக வசூலானது. மார்ச் மாத வசூல் ரூ.1.42 லட்சம் கோடியாக இருந்தது. இந்த நிலையில், ஜி.எஸ்.டி வரி வசூலில் இதுவரை இல்லாத அளவு புதிய உச்சமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ. 1.68 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 20 சதவிகிதம் ஆகும்.
ஜி.எஸ்.டி. வரி வசூல் தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஏபரல் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 540 கோடி ஆகும். இதில், சி.ஜி.எஸ்.டி ரூ. 33,159 கோடி, எஸ்.ஜி.எஸ்.டி ரூ. 41,793 கோடி ஆகும். பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.36,705 கோடி உள்பட ஐ.ஜி.எஸ்.டி. வசூல் ரூ.81,939 கோடி ஆகும். பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.857 கோடி உள்பட செஸ் வரி மூலம் ரூ.10,649 கோடி கிடைத்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் வசூலான ஜி.எஸ்.டி தொகையை விட ஏப்ரல் மாதத்தில் 25,000 கோடி கூடுதலாக கிடைத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.