ஹைலாகண்டி (அசாம்):
அசாம் மாநிலம் ஹைலாகண்டி மாவட்டத்தில் போலீஸ் கஸ்டடியில் இருந்து தப்பிச் சென்ற நிலக்கரி வியாபாரியை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
சட்டவிரோதமாக நிலக்கரி வர்த்தகத்தில் ஈடுபட்டதாக, கரீம்கஞ்ச் மாவட்டம் சதர்கண்டி பகுதியில் கைது செய்யப்பட்ட அந்த நபர், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக இன்று காலை 11.30 மணியளவில் லாலா நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது தப்பிச் சென்றுள்ளார்.
இதையடுத்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அப்போது, லாலா நகரில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள லக்கிநகர் பகுதி வழியாக அந்த நபர் தப்பிச் செல்ல முயற்சிப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
அப்போது அந்த நபர், இன்னொருவருடன் பைக்கில் வந்தபோது போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர். ஆனால் அவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தி, அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். இதையடுத்து போலீசாரும் துப்பாக்கி சூடு நடத்தி பதிலடி கொடுத்தனர். இதில், குற்றவாளி உயிரிழந்தார். மற்றொருவர் தப்பிச் சென்றுள்ளார்.
இறந்த நபர், பராக் பள்ளத்தாக்கின் சட்டவிரோத நிலக்கரி வர்த்தகம் செய்யும் கும்பலின் மூளையாக செயல்பட்டவர் என்றும், அவர் மீது 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாகவும், சிபிஐ விசாரணை நடந்து வருவதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு கவுரவ் உபாத்யாய் கூறினார்.