திராவிட சமூகப் பேரவையின் முதலாம் ஆண்டு விழாவையொட்டி, நடைபெறும் திராவிடக் கருத்தரங்கம் நிகழ்ச்சியின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் சகோதரர் அரசியலில் வெளிச்சத்திற்கு வருகிறார்.
திமுகவின் விமர்சர்கள் பலரும் திமுகவில் குடும்ப அரசியல் செல்வாக்கு செலுத்துவதாக தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். அதற்கு திமுகவினர் மற்ற கட்சிகளில் மட்டும் என்ன குடும்ப அரசியல், வாரிசு அரசியல் இல்லையா என்று கிட்டத்தட்ட எல்லா கட்சிகளையும் மேற்கோள் காட்டி பதிலடிகொடுப்பதும் நடந்து வருகிறது.
மறைந்த முன்னாள் முதல்வரும் திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் குடும்பத்தினர் திமுக கட்டுப்படுத்தி வருவதாக விமர்சனங்கள் வைக்கின்றனர். கலைஞர் கருணாநிதியி மகன் மு.க. ஸ்டாலின் தற்போது, முதலமைச்சராகவும் திமுக தலைவராகவும் உள்ளார். ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி செயலாளராகவும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வாகவும் உள்ளார். கருணாநிதியின் மகள் கனிமொழி திமுக மகளிரணி செயலாளராகவும் தூத்துக்குடி எம்.பி.யாகவும் உள்ளார். இப்படி, நீளும் இந்த பட்டியல், திமுகவில் கருணாநிதி குடும்பத்தின் செல்வாக்கு விமர்சகர்களால் அவ்வப்போது கடுமையாக சுட்டிக்காட்டப்படுகிறது.
அதே நேரத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் திமுகவிலும் ஆட்சியிலும் ஒரு அதிகார மையமாக இருப்பதை பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். திராவிட இயக்கத்தின் கொள்கைகளுக்கு முரணாக துர்கா ஸ்டாலின் அவ்வப்போது, கோயில்களுக்கு செல்வது திராவிட இயக்கத்தின் கடும்போக்குவாதிகளாலேயே விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், துர்கா ஸ்டாலின் தனது ஆன்மீக செயல்களை மாற்றிக்கொண்டதில்லை.
இந்த சூழ்நிலையில்தான், திராவிட சமூகப் பேரவையின் முதலாம் ஆண்டு விழாவையொட்டி, நடைபெறும் திராவிடக் கருத்தரங்கம் நிகழ்ச்சியின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் சகோதரர் டாக்டர் ஜெய ராஜ மூர்த்தி அரசியல் அரங்கில் வெளிச்சத்திற்கு வந்துள்ளார்.
துர்கா ஸ்டாலினின் சகோதரர் டாக்டர் ஜெய. ராஜ மூர்த்தி நாகப்பட்டினம் மாவட்டம், திருவெண்காட்டைச் சேர்ந்தவர். அரசு மருத்துவமனையில் 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறார். இவர் வைத்திருக்கும் அறக்கட்டளையின் மூலம் மக்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார். வெளிப்படையாக திமுகவின் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டதில்லை.
டாக்டர் ஜெய. ராஜ மூர்த்தி மருத்துவர் மட்டுமல்ல, எழுத்தாளரும்கூட. ‘நேசம் விரும்பும் நெருப்புப் பூக்கள்’, ‘புனித வள்ளலாரின் புரட்சிப்பாதை’, ‘எனது அம்பறாத் தூணியிலிருந்து’ என பல நூல்களை எழுதியிருக்கிறார். இவர் எழுதிய ‘வள்ளலாரும் பெரியாரும்’ எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் திறனாய்வு வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
திராவிடக் கொள்கையில் பிடிப்புகொண்ட டாக்டர் ஜெய. ராஜ மூர்த்தி, திராவிட சமூகப் பேரவையின் முதலாம் ஆண்டு விழாவையொட்டி, சென்னை அன்பகத்தில் மே 6ம் தேதி நடைபெற உள்ள திராவிட கருத்தரங்கில் கலந்துகொள்கிறார். இந்த கருத்தரங்கில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாள சுப. வீரபாண்டியன், பொருளாதார நிபுணர் ஜெ. ஜெயரஞ்சன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இந்த கருத்தரங்கில் டாக்டர் ஜெய. ராஜ மூர்த்தி திராவிடமும் சமூக முன்னேற்றமும் என்ற தலைப்பில் பேசுகிறார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் சகோதரர் டாக்டர் ஜெய. ராஜமூர்த்தி பங்கேற்கும் கருத்தரங்கு என்பதால் இந்த கருத்தரங்கு திமுகவினர் மத்தியில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டாக்டர் ராஜமூர்த்தி திராவிடக் கருத்தரங்கம் மூலம் அரசியல் அரங்கில் வெளிச்சத்திற்கு வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“