மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கச் செய்ததால் அதிருப்தி அடைந்த நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அந்த நிகழ்ச்சியில் நேரடியாக கண்டித்துள்ளார். இந்த விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து, கல்லூரியின் முதல்வர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்சியில் மருத்துவ மாணவர்களை ஹிப்போகிரேடிக் உறுதிமொழியை ஏற்கச் செய்வதற்கு பதிலாக, மகரிஷி சரக் சப்த் என்ற சமஸ்கிருதத்தில் அமைந்த உறுதிமொழியை ஒருவர் வாசிக்க மற்ற மாணவர்கள் அதைத் திரும்பக் கூறி ஏற்றனர். மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றதற்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அதிருப்தி தெரிவித்தார். மேலும், மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பியதுடன், அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழகத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு என்பது இன்றும் நீரு பூத்த நெருப்பாக இருந்து வருகிறது. அவ்வப்போது, தமிழகத்தில் எழும் குரல்கள் இதை உறுதி செய்கின்றன. அதிலும், இந்தி திணிப்பு எதிர்ப்பிலும் சமஸ்கிருத ஆதிக்க எதிர்ப்பிலும் உறுதியாக உள்ள திமுக ஆட்சியில், நிதியமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மருத்துவ மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மதுரை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக துறை ரீதியாக விசாரணை நடத்த மருத்துவக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமல்லாது இப்போகிரேடிக் உறுதிமொழியையே பின்பற்றுமாறும் மருத்துக் கல்லூரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மதுரை மருத்துவக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், திடீரென்று சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றிருக்கிறார்கள். இந்த தகவல் இன்றைக்கு ஆங்கில செய்தித்தாள்களில் வந்திருந்தது. இதையடுத்து, முதல்வரின் வழிகாட்டுதலின்படி, மதுரை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் உடனடியாக இடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், 36 மருத்துவக் கல்லூரிகளிலும் இனிமேல் ஆங்கிலத்தில் உறுதி மொழி ஏற்க வேண்டும் என்ற சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளோம்” என்று கூறினார்.
சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றது தொடர்பாக, மதுரை மருத்துவக் கல்லூரி தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், மருத்துவ மாணவர்கள் உறுதிமொழி ஏற்பில் இணையதளத்தில் இருந்து தவறுதலாக சமஸ்கிருத உறுதிமொழி பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அதையே மாணவர்களும் வாசித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே, சமஸ்கிருதத்தில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்ற விவகாரத்தில் கல்லூரி முதல்வர் ரத்னவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மதுரை அரசு மருத்துவக் கல்லூரியின் துணை முதல்வர் தனலட்சுமி, டீன் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“