பழநி: வெங்காயத்திற்கு உரிய விலை கிடைக்காததால், பயிரிட்ட வெங்காயத்தை இலவசமாக எடுத்து செல்லலாம் என பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளார் பழநி அருகே பனம்பட்டி கிராமத்தை விவசாயி சிவராஜ். இழப்பிலும் வெங்காயம் வீணாகாமல் தடுக்க எனக்கு வேறு வழிதெரியவில்லை என்கிறார் விவசாயி.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பனம்பட்டியை சேர்ந்த விவசாயி சிவராஜ். இவர் தனக்கு சொந்தமான 14 ஏக்கர் விளைநிலத்தில் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் பயிரிட்டுள்ளார். இரண்டு ஏக்கரில் வெங்காயம் தற்போது அறுவடைக்கு தயார்நிலையில் உள்ளது. இந்நிலையில் வெங்காயவிலை சரிந்ததால், வெங்காயத்தை கூலிகொடுத்து அறுவடை செய்து அதை பழநியிலுள்ள மார்க்கெட்டிற்கு வாகனத்தில் எடுத்தவந்து விற்பனை செய்தால், ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் இழப்பு ஏற்படுவதால், வெங்காயத்தை பறிக்காமல் விட முடிவு செய்தார்.
இந்நிலையில் விளைந்த வெங்காயம் வீணாவதை பார்க்க மனமில்லாமல், பொதுமக்களுக்கு வீடியோ ஒன்றை பதிவு செய்து வாட்ஸ் ஆப் மூலம் பரப்பினார். இதில் வெங்காயம் பயிரிட்டு பராமரிப்பு செலவு, விலை பறிப்பு கூலி, சந்தைக்கு கொண்டுவர வாகன கட்டணம் என கணக்கு பார்த்தால் ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் இழப்பு ஏற்படுகிறது. இதற்கு பறிக்காமலேயே நிலத்தில் விட்டுவிட்டால் பயிரிட்ட பராமரித்த செலவு மட்டுமே இழப்பாகும். இதனால் இழப்பு குறையும். இருந்தாலும் வெங்காயம் நிலத்தில் வீணாவதை பார்க்க மனமில்லாமல் மக்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்தேன். எனக்கு வேறு வழிதெரியவில்லை. எனது நிலத்திற்கு வந்து வெங்காயத்தை தாங்களாகவே அறுவடை செய்து எடுத்துச்செல்லலாம். பழநி அருகே பனம்பட்டி என்ற கிராமத்தில் எனது நிலம் உள்ளது என கூறி அதற்கான பஸ் வழித்தடம், அவரது அலைபேசி எண் ஆகியவற்றையும் வீடியோவில் வெளியிட்டுள்ளார்.
மக்கள் நெகிழ்ச்சி: விவசாயி சிவராஜ்ன் அறிவிப்பால் அருகிலுள்ள கிராமமக்கள் இவரது நிலத்திற்கு சென்று வெங்காயத்தை இலவசமாக தாங்களே அறுவடை செய்து கொண்டு செல்கின்றனர். வெங்காயம் விவசாயம் செய்ததால் ஏற்பட்ட இழப்பை பொருட்படுத்தாமலும், பயிரிட்ட வெங்காயம் வீணாகாமல் தடுக்கவும் மக்களுக்கு இலவசமாக வழங்க முன்வந்து விவசாயி சிவராஜின் செயல் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு கிலோ வெங்காயம் ரூ.7: திண்டுக்கல் மாவட்டத்தில் விளையும் காய்கறிகள் ஒட்டன்சத்திரம், பழநி, திண்டுக்கல் ஆகிய நகரங்களில் உள்ள மார்க்கெட்டிற்கு கொண்டுவந்து விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சராசரியை விட அதிகம் பெய்ததால் தோடத்து கிணறுகளில் தேவைக்கேற்ப தண்ணீர் உள்ளது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் வெங்காயம் பயிரிட்டனர். வெங்காயம் விளைச்சலுக்கு பருவநிலையும் இருந்ததால் விளைச்சல் அமோகமாக இருந்தது. இதனால் மாவட்டத்தின் பல இடங்களில் ஒரே நேரத்தில் அறுவடை, வெளிமாவட்டங்களில் இருந்தும் மார்க்கெட்டிற்கு வெங்காயம் வருகை என, மார்க்கெட்டிற்கு வெங்காய வரத்து அதிகரித்தது. இதன் எதிரொலியாக ஒரு கிலோ வெங்காயம் ரூ.7 க்கு விற்பனையாகிறது. கடந்த மூன்று மாதமாக நடவு செய்து பராமரித்தது, அறுவடை, வாகனசெலவு என வரவை விட செலவு அதிகரித்துள்ளதால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துவருகின்றனர்.