ஒன்று பெரியது, மற்றொன்று சிறியது; மார்பக வித்தியாசம் இயல்பானதுதானா? காமத்துக்கு மரியாதை – S2 E18

பெண்கள் தங்கள் உடல் சார்ந்த சந்தேகங்களையும் பிரச்னைகளையும் அவ்வளவு சுலபத்தில் யாரிடமும் பேசி நிவர்த்தி செய்துகொள்ள மாட்டார்கள். அவற்றில் ஒன்றுதான், `ஒரு பக்க மார்பகம் பெரிதாக இருக்கிறது. மறுபக்கமோ அதைவிட சிறிதாக இருக்கிறது. இது பிரச்னையா அல்லது இயல்பானதா’ என்கிற சந்தேகம். இந்த வாரம் இதுபற்றி பேசவிருக்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.

பாலியல் மருத்துவர் காமராஜ்

“ஒரு சில பெண்களுக்கு மார்பகங்கள் ஒரு பக்கம் பெரிதாகவும், மற்றொரு பக்கம் சற்று சிறியதாகவோ, வடிவில் சற்று வித்தியாசமாகவோ இருக்கும். இந்தப் பெண்களுக்கு `இந்த அளவு வித்தியாசம் நமக்குத் தெரிஞ்ச மாதிரி மத்தவங்களுக்கும் தெரிஞ்சுடுமோ’ என்கிற பயமும் கூச்சமும் இருக்கும். ஒரு சிலருக்கு `இது ஏதாவது பிரச்னையா இருக்குமோ’ என்கிற பயத்தையும் ஏற்படுத்திவிடும்.

பெண்களுக்கு மட்டுமல்ல, பொதுவாக மனிதர்களுடைய உடலின் இருபக்கங்களும் ஒன்றுபோல இருக்காது. பார்ப்பதற்கு பெரிய அளவில் வித்தியாசம் தெரியாது என்றாலும், பலருடைய உடலிலும் இந்த வித்தியாசம் இருக்கும். உற்றுப்பார்த்தால் மட்டுமே இது தெரியும். உடலின் வெளிப்புற உறுப்புகள் மட்டுமல்ல, உடலின் உள்ளுறுப்புகளும் ஒரு பக்கத்தில் இருப்பதுபோல மறுபக்கத்தில் இருக்காது. ஆண்களின் விதைப்பைகள்கூட ஒருபக்கம் ஏறியும் ஒருபக்கம் இறங்கியும்தான் இருக்கும். இயற்கை, மனித உடலமைப்பை இப்படித்தான் படைத்திருக்கிறது.

காமத்துக்கு மரியாதை

மார்பகங்கள் இரண்டும் ஒன்றுபோலவே இருப்பதும், ஒரே அளவில் இருக்க வேண்டியதும் அவசியமே இல்லை; அப்படி இருக்கவும் இருக்காது. அளவும் வடிவும் மாறி மாறித்தான் இருக்கும். இது பிரச்னையா என்றால், பெரும்பாலும் இல்லை” என்றவர் தொடர்ந்தார்.

“திருமணமான பெண்களில் பெரும்பாலானோருக்கு இடது மார்பகம் வலது பக்கத்தைவிட சற்று பெரிதாக இருக்கும். இதற்கு காரணம் பெரும்பாலான ஆண்கள் வலது கை பழக்கம் உள்ளவர்கள் என்பதுதான். இந்தக் காரணமில்லாமலும் வித்தியாசம் இருக்கிறது என்றாலும் இயல்பானதுதான். ஒருவேளை சாதாரணமாகப் பார்த்தாலே வித்தியாசம் நன்கு தெரிகிறது என்றாலும், பெரும்பாலும் அதனால் எந்தப் பிரச்னையும் இருக்காது.

காமத்துக்கு மரியாதை

வெளியே தெரிகிற அளவுக்கு வித்தியாசம் தெரிகிற நிலையில் இருக்கிற பெண்களும், உடல் வடிவத்துக்கு முக்கியத்துவம் தருகிற மாடலிங், ஆக்டிங் போன்ற வேலைகள் செய்கிற பெண்களும் சிறிய அறுவைசிகிச்சையின் மூலம் இதைச் சரிசெய்து கொள்ளலாம். மற்ற பெண்களுக்கு அறுவை சிகிச்சையெல்லாம் அவசியமில்லை. பெண்கள் இதுகுறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்பதே என் கருத்து. `இது ஏதேனும் பிரச்னையாக இருக்குமோ’ என்று பயப்படுகிற பெண்கள் மட்டும் மருத்துவரை அணுகுவது நல்லது” என்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.

தொடர்ந்து மரியாதை செய்வோம்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.