திருவனந்தபுரம்: கேரளாவின் மூத்த அரசியல் தலைவர் பி.சி. ஜார்ஜ், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக நேற்று கைது செய்யப்பட்டார்.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் அண்மையில் நடைபெற்ற அனந்தபுரி இந்து மகா சம்மேளன மாநாட்டில் ஜார்ஜ் பங்கேற்று பேசினார். அப்போது அவர், “முஸ்லிம்கள் நடத்தும் ஓட்டல்களில் குளிர்பானம், தேநீரில்கருத்தடை மாத்திரை கலக்கப்படுகிறது. இதனால் ஆண்கள், பெண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படும். இந்துக்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி முஸ்லிம்களின் மக்கள் தொகையை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது” என்று குற்றம் சாட்டினார்.
அவருக்கு எதிராக கேரள காவல் துறை தலைவர் அனில் காந்த் மற்றும் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக திருவனந்தபுரம் கோட்டை போலீஸார் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து கோட்டயம் மாவட்டம், இராட்டுபேட்டையில் உள்ள பி.சி.ஜார்ஜ் வீட்டுக்கு நேற்று சென்ற போலீஸார், அவரை கைது செய்தனர்.
ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்: அங்கிருந்து சாலை மார்க்கமாக திருவனந்தபுரம் நந்தவனத்தில் உள்ள ஆயுதப்படை முகாமுக்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதன்பிறகு மாவட்ட மாஜிஸ்திரேட் ஆஷா கோஸி வீட்டில் ஜார்ஜை ஆஜர்படுத்தினர். அவரை 14 நாட்கள் காவலில் விசாரிக்க போலீஸ் தரப்பில் அனுமதி கோரப்பட்டது.
பி.சி. ஜார்ஜ் தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது. இனிமேல் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேச மாட்டேன் என்று ஜார்ஜ் வாக்குறுதி அளித்ததால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறும்போது, “முதல்வர் பினராயி விஜயனின் உத்தரவால் என்னை கைது செய்துள்ளனர். இதன்மூலம் அடிப்படைவாத முஸ்லிம் அமைப்புகளுக்கு முதல்வர் ரம்ஜான் பரிசு வழங்கியுள்ளார்” என்று குற்றம் சாட்டினார்.
ஆரம்பத்தில் காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த பி.சி.ஜார்ஜ் பல்வேறு கட்சிகளுக்கு மாறினார். கடந்த 2019-ம் ஆண்டில் கேரள ஜனபக்சம் என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சி பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.