அதிமுக கொண்டு வந்த திட்டங்களை மூடுவிழா காண்பது…. திட்டங்களின் பெயர்களை மாற்றுவது தான் திராவிட மாடலா என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுக்கோட்டையில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சிவபதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும்போது…
“பகல் நேரத்தில் வறுத்தெடுக்கும் சூரியனின் தாக்கம் இரவு நேரத்திலும் வாட்டி வதைக்கிறது. அதேபோன்றுதான் தமிழகத்தில் ஆட்சியும் மக்களை வாட்டி வருகிறது.
சூரியன் சுட்டெரிக்கிறது. நமக்கு மட்டுமல்ல திமுககாரர்களுக்கும் இதே நிலை தான். திமுககாரர்கள் தற்போது தமிழகத்தில் ஏன் இந்த ஆட்சி வந்தது என்று புலம்பும் அளவிற்கு இந்த ஆட்சி நடந்து வருகிறது.
ஆட்சி என்பது ஒரு குடை. மக்களை பாதுகாக்கும் குடையாக இருக்க வேண்டும். நிழல் குடையாக இருக்க வேண்டும். திமுகவின் ஆட்சியில் அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
நகைக்கடன் தள்ளுபடி 36 லட்சம் பேருக்கு என்று கூறிவிட்டு தற்போது யாருக்குமே தள்ளுபடி செய்யாமல் இருப்பதால், பொதுமக்களின் மிகப்பெரிய கோபத்திற்கு ஆளாகி உள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் ஏழை மக்களுக்கு பயன்பட வேண்டும் என்று தொடங்கப் பெற்ற அனைத்து திட்டங்களும் இந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டு வருகிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அன்றைக்கு ஒரு ஆற்காடு வீராசாமி இன்றைக்கு ஒரு செந்தில் பாலாஜி செயல்பட்டு வருகிறார். பதினோரு அரசு மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு, மருத்துவக் கல்லூரியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு ஆகியவை அதிமுக அரசால் கொண்டு வரப்பட்டது.
ஆனால் தற்போது திமுக கொண்டு வந்த திட்டம்போன்று அதை செயல்படுத்துவது எந்த விதத்தில் நியாயம். 7.5 சதவீத இட ஒதுக்கீடு பொறியியல் கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது.
திராவிட மாடல் என்று கூறிக்கொண்டு அதிமுக கொண்டு வந்த திட்டத்தை தாங்கள் கொண்டு வந்தது போன்று சித்தரிப்பது எந்த விதத்தில் நியாயம்..?
என்மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அதை எப்படியும் சமாளிக்கும் தைரியம் எனக்கு உள்ளது. சமாளித்து வெற்றி பெறுவேன். இருப்பினும் அதிமுக தொண்டன் மீது திமுக பழிவாங்கும் நோக்கத்தோடு வழக்கு தொடர்ந்தால் அதை நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம்” என்று பேசினார்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM