சென்னை:
தமிழகத்தில் கோடை வெயில் உக்கிரமடைந்துள்ள நிலையில் அக்னி நட்சத்திரம் வரும் 4ம் தேதி துவங்குகிறது. இந்த உச்சபட்ச வெப்ப நாட்கள் 28ம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் இருந்தே வெயில் அதிகமாக காணப்படுகிறது. தமிழகத்தில் சில இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்த தொடங்கிவிட்டது.
வானிலை ஆய்வு மைய கணிப்பின்படி மார்ச் முதல் மே வரை கோடை காலம். இதன்படி தமிழகத்தில் இன்றும் நாளையும் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பு அளவை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை உயரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4-ந்தேதி தொடங்குகிறது. மே 28-ந் தேதி வரை தொடர்ந்து 25 நாட்களுக்கு அக்னி வெயில் நீடிக்கும். அக்னி வெயில் காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும்.
அக்னி வெயில் காலகட்டத்தின்போது மே 11 முதல் 24-ந்தேதி வரை வெயில் மிகவும் அதிகமாக காணப்படும். எனவே பொதுமக்கள் இதுபோன்ற நாட்களில் பகல் நேரத்தில் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.