திருச்சி தமிழ் சுவிசேஷ லுத்தரன் சபையின் (டி.இ.எல்.சி) பிஷப் ஆக இருப்பவர் மார்ட்டின். இவர் மீது மதுரை கிரம்மாபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர், திருச்சி சிட்டி போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனைச் சந்தித்து பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “2009-ம் ஆண்டு திருச்சி டி.இ.எல்.சி பிஷப் மார்ட்டின், `திருச்சபை சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. திருச்சபையின் செலவினங்களுக்கு ஒன்றரை கோடி ரூபாய் ஏற்பாடு செய்து கொடுங்கள்’ என்றார். அதற்கு பிரதிபலனாக திருச்சபையின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனம் பெற்றுத் தருவதாகச் சொன்னார். அதனை நம்பி நானும் எனக்குத் தெரிந்த நண்பர்களிடம் கடன் வாங்கி, ஒன்றரை கோடி ரூபாயை பிஷப் மார்ட்டினிடம் அவரின் அலுவலகத்தில் வைத்து கொடுத்தேன்.
அப்போது பிஷப் மார்ட்டினின் மனைவி ஜீவஜோதி, சகோதரர் ஹென்றி ராஜசேகர் ஆகியோரும் ஆசிரியர் பணி தொடர்பாக எனக்கு உறுதியளித்தனர். ஆனால், அவர்கள் சொன்னபடி ஆசிரியர் பணி நியமனம் செய்து கொடுக்காமல் இழுத்தடித்தனர். இதற்கிடையே 2013-ம் ஆண்டு, `இன்னும் ஒன்றரை கோடி ரூபாய் தேவைப்படுகிறது’ என பிஷப் மார்ட்டின் என்னிடம் கேட்டார். ஏற்பாடு செய்து கொடுத்தேன். இருந்தபோதிலும் கடைசி வரை அவர்கள் சொன்னபடி ஆசிரியர் பணியை பெற்றுத்தரவில்லை. என்னை ஏமாற்றி 3 கோடி ரூபாயை மோசடி செய்து ஏமாற்றி விட்டனர். எனவே பிஷப் மார்ட்டின், ஜீவஜோதி, ஹென்றி ராஜசேகர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து 3 கோடி ரூபாயைப் பெற்றுத்தர வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதனையடுத்து விசாரணையில் 3 கோடி மோசடி செய்தது உறுதியானதையடுத்து, பிஷப் மார்ட்டின், ஜீவஜோதி, ஹென்றி ராஜசேகர் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். “தலைமறைவாக இருக்கும் பிஷப் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றிருக்க வாய்ப்பிருக்கிறது. இருந்தபோதிலும், அவரின் நெட்வொர்க்கை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்” என்கின்றனர் விஷயமறிந்த போலீஸார்.