Doctor Vikatan: அடிக்கடி மரத்துப்போகும் விரல்கள்; என்ன பிரச்னையாக இருக்கும்?

வலது உள்ளங்கை அடிக்கடி மரத்துப்போகிறது. விரல்களை மடக்கினாலே ஒரு நிமிடத்தில் மரத்து விடுகின்றன. எனக்கு ரத்தச்சோகையும் உள்ளது. இடது உள்ளங்காலில் அரிப்பு உள்ளது. எனக்கு என்னதான் பிரச்னையாக இருக்கும்? தீர்வு சொல்வீர்களா?

– அனிதா பிரீத்தி (விகடன் இணையத்திலிருந்து)

ஆதித்யன் குகன்

பதில் சொல்கிறார் கோவையைச் சேர்ந்த, பொதுமருத்துவர் ஆதித்யன் குகன்.

“நீங்கள் குறிப்பிட்டுள்ள மரத்துப்போகும் உணர்வு, ரத்தச்சோகை போன்றவற்றை வைத்துப் பார்க்கும்போது உங்களுக்கு ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 குறைபாடு இருக்கலாம் என்று தெரிகிறது. சைவ உணவுக்காரர்களுக்கு இந்தப் பிரச்னை சகஜமானது. அசைவம் சாப்பிடுகிறவர்களிலும் சிலருக்கு இந்தச் சத்துகளை உட்கிரகிப்பதில் பிரச்னைகள் இருந்தால் அவர்களுக்கும் இவை பாதிக்கலாம். அதாவது உடலில் புரதச்சத்து குறைவாக இருந்தால் இந்தச் சத்துகள் உட்கிரகிக்கப்படாது.

எனவே அடிக்கடி கை, கால்கள் மரத்துப்போவது, குறுகுறுப்பு உணர்வு, ரத்தச்சோகை போன்றவை ஏற்பட்டால் முழுமையான ரத்தப் பரிசோதனை செய்து பார்க்க வேண்டியது அவசியம். `கம்ப்ளீட் பிளட் கவுன்ட்’ என்று சொல்லப்படும் அந்த டெஸ்ட்டில் ரத்தச் சிவப்பு அணுக்களின் அளவு சரிபார்க்கப்பட வேண்டும். ஒருவேளை அந்த அணுக்களின் அளவு பெரிதாக இருந்தால் அதை `மெகலோபிளாஸ்டிக் அனீமியா’ (Megaloblastic anemia) என்று சொல்வோம்.

அனீமியா எனப்படும் ரத்தச் சோகையில் இருவகை மிகவும் சகஜம். ஒன்று `மைக்ரோசைட்டிக் அனீமியா’ (Microcytic anemia ). இது இரும்புச்சத்துக் குறைபாட்டால் வருவது. முதலில் குறிப்பிட்ட மெகலோபிளாஸ்டிக் அனீமியா என்பது வைட்டமின் பி 12 சத்துக் குறைபாட்டால் வருவது.

ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி 12 சத்துக் குறைபாடுகளுக்கான டெஸ்ட்டை வெறும் வயிற்றில் செய்துபார்த்துவிட்டு, மருத்துவ ஆலோசனையோடு சப்ளிமென்ட் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை வைட்டமின் பி 12 அளவு மிகவும் குறைவாக இருக்கும் பட்சத்தில் வாய்வழியே எடுத்துக்கொள்ளும் சப்ளிமென்ட் போதுமானதாக இருக்காது.

Hands (Representational Image)

ஒரு வாரத்துக்கு ஊசி போட வேண்டியிருக்கும். எனவே இந்த விஷயங்கள் குறித்து நீங்கள் உங்கள் குடும்ப மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது சிறந்தது.”

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.