உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆகிறார்?- இளைஞர் அணியினர் மிகுந்த எதிர்பார்ப்பு

சென்னை:

தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனான நடிகர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு கட்சி நிகழ்ச்சிகளில் எப்போதாவது பங்கேற்று வந்தார். அந்த நிலையில் அவர் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களும், மூத்த நிர்வாகிகளும் வலியுறுத்தி வந்தனர்.

இதைத் தொடர்ந்து கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சென்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். இதில் அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் வரவேற்பு அமோக இருந்தது.

கட்சி நிர்வாகிகள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டது. உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்துக்கு செல்லும் பகுதிகளில் ஒரு தலைவருக்கான உரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டது.

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றதற்கு உதயநிதி ஸ்டாலினின் பிரசார ராசியும் ஒரு காரணம் என்று கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசப்பட்டது.

இந்த தேர்தலுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்.

கட்சியின் மாவட்டக் கழக செயலாளர்கள் உதயநிதி ஸ்டாலினை கொடியேற்று நிகழ்ச்சிக்கும், ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிகளுக்கும் அழைத்து அவருக்கு மேலும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் கைவசம் இருந்த படங்களை நடித்து முடித்த உதயநிதி ஸ்டாலின் தீவிர அரசியலில் இறங்கினார்.

இளைஞரணி நிர்வாகிகளை அழைத்து அவ்வப்போது ஆலோசனை கூட்டங்கள் நடத்தி கட்சி வளர்ச்சிக்கு பல்வேறு நல்ல பல திட்டங்களையும் எடுத்து கூறி வந்தார்.

இதைத்தொடர்ந்து 2021 சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலினுக்கு சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்த தேர்தலில் அவர் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்டது மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் மற்ற தொகுதிகளுக்கும் சென்று தேர்தல் பிரசாரம் செய்தார்.

இந்த தேர்தலில் தி.மு.க. அமோகமாக வெற்றி பெற்று ஆட்சியையும் பிடித்தது.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினும் இடம் பெறுவார் என்று முதலில் பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால் உதயநிதி ஸ்டாலினை தொகுதியை நன்றாக பார்த்து மக்கள் பணியாற்றுமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

அதன்படி சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வீதி வீதியாக, வீடு வீடாக சென்று மக்கள் குறை கேட்டு வருகிறார்.

மக்கள் கொடுக்கும் மனுக்களை நிறைவேற்ற அமைச்சர்களையும் தொடர்பு கொண்டு கோரிக்கை மனுக்களை அனுப்பி வருகிறார்.

இந்த நிலையில், கட்சி கூட்டங்களிலும் அரசு நிகழ்ச்சிகளிலும் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் அதிகம் வழங்கப்பட்டு வருகிறது.

அவர் அமைச்சராகி தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று ஒவ்வொரு அமைச்சர்களும் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.

சட்டசபையிலும் உதயநிதி ஸ்டாலின் வரும்போது அவருக்கு எம்.எல்.ஏ.க்கள் அதிக மரியாதை கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆவதால் இந்தமுறை அமைச்சரவை மாற்றம் நடைபெறும் போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகி விடுவார் என்று கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அநேகமாக இந்த மாதம் இறுதிக்குள் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக அதிக வாய்ப்பு உள்ளதாகவும் உள்ளாட்சி துறை மந்திரி பதவி கிடைக்கும் என்றும் கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.