நடுவானில் குலுங்கிய விமானம்… பயணிகள் காயம் – விசாரணைக்கு உத்தரவு!

மும்பையில் இருந்து மேற்குவங்க மாநிலம் துர்காபூருக்கு
ஸ்பைஸ் ஜெட்
விமானம் பயணிகளுடன் நேற்று மாலை புறப்பட்டது. அப்போது திடீரென நடுவானில் காற்றின் வேகத்தில் சிக்கிக் குலுங்கியது. இதில் பயணிகளின் பொருட்கள் கீழே விழுந்தன. கீழே விழுந்தும், முன் இருக்கையில் மோதியும் பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது.

ஸ்பைஸ் ஜெட் விமானம் நடுவானில் காற்றின் வேகத்தில் சிக்கி பயங்கரமாக குலுங்கியதில் பயணிகள் 14 பேர், விமான ஊழியர்கள் 3 பேர் என மொத்தம் 17 பேர் காயமடைந்தனர். ஆனாலும், கூட விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கும் வேளையில் மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பாக ஸ்பைஸ் ஜெட் நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மே 1ஆம் தேதி, ஸ்பைஸ் ஜெட் போயிங் B737 ரக விமானம் ( விமான எண்: SG-945 ) மும்பையில் இருந்து துர்காபூருக்கு சென்றது. எதிர்பாராத விதமாக விமானம் ஜெட் டர்பியூலன்ஸில் சிக்கியது. இதில் சில பயணிகள் காயமடைந்தனர். இருப்பினும் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. விமானம் துர்காபூர் வந்தவுடன் காயமடைந்த பயணிகள் அனைவருக்கும் உரிய சிகிச்சை வழங்கப்பட்டது.” என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்பைஸ் ஜெட் விமானம் நடுவானில் குலுங்கிய விபத்து தொடர்பாக விரிவான விசாரணைக்கு
விமானப் போக்குவரத்து இயக்குநரகம்
உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணைக் குழுவை நியமித்துள்ளதாகவும், பயணிகளின் மருத்துவ அறிக்கைகளை பெற நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.