கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிற `விக்ரம்’ படம், வருகிற ஜூன் 3-ம் தேதி வெளியாகிறது. இதனையொட்டி படத்திற்கான புரொமோஷன்களை ரயில் விளம்பரத்தில் இருந்து தொடங்கியிருக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்றும் ஒரு அப்டேட் வருகிறது.
இதுகுறித்து கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், ”ரயில் பயணம் எனக்குப் பிடிக்கும். ரயிலில் படப்பிடிப்பு சுலபமானது என்பதால் இன்னும் பிடிக்கும். என் படங்களில் ரயில்கள் முக்கியமானவை. என் படங்களில் ரயில்கள் முக்கியமானவை. `மூன்றாம் பிறை’, `மகாநதி’, `தேவர் மகன்’ என பல ரயில் காட்சிகள் உங்கள் நினைவுக்கு வரலாம்.இப்போது என் படத்தைத் தாங்கிய ரயில்கள் வலம் வருவது மகிழ்ச்சியைத் தருகிறது.” என்று சொல்லியிருந்தார் கமல். இந்த ரயில் புரொமோஷனைத் தொடர்ந்து இன்றும் ஒரு அப்டேட் வருகிறது.
இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்பையிலும் சென்னையிலுமாக மும்முரமாக நடந்து வருகிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு க்ரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் இப்படத்தை வெளியிடுகிறது.
படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டாலும், இன்னும் இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை. இந்த விழாவை முதலில் துபாயில் நடத்தத் திட்டமிட்டனர். ஆனால் அதில் மாற்றம் ஏற்பட்டு, படத்தின் ட்ரைலரை கான்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடுகின்றனர். படத்தின் இசை வெளியீட்டுக்கான தேதி, இடம் ஆகியவை குறித்து இன்று மாலை அப்டேட் வெளியாகிறது. இசை வெளியீட்டை சென்னையில் நடத்துவது குறித்தும் அதை கலைஞர் டி.வி.யில் நேரடி ஒளிப்பரப்பு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இம்மாதம் இரண்டாவது வாரத்தில் இசை வெளியீட்டு விழா இருக்கலாம்.