'ஒரு மூத்த மருத்துவரின் சேவையை மக்கள் இழந்துவிடக்கூடாது' – சமஸ்கிருத உறுதிமொழி விவகாரத்தில் ப.சிதம்பரம் கருத்து 

சென்னை: “சமஸ்கிருத உறுதிமொழி விவகாரத்தில், டீனுக்குத் தெரியாமல் இந்தப் பிழை நடந்திருந்தால் அவரைப் பொறுப்பாக்கக் கூடாது. ஒரு நல்ல, மூத்த மருத்துவரின் சேவையை மக்கள் இழந்துவிடக்கூடாது என்பதே என் கவலை” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மதுரை மருத்துவக் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்கள் சமஸ்கிருத உறுதிமொழியை மொழிமாற்றம் செய்து உறுதியேற்றதாக பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த விவகாரத்தில் மருத்துவக் கல்லூரி முதல்வர் ரெத்தினவேலு காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் உத்தரவின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், அவருக்குத் தெரியாமல் இந்தப் பிழை நடந்திருந்தால் அவரைப் பொறுப்பாக்கக் கூடாது. ஒரு நல்ல, மூத்த மருத்துவரின் சேவையை மக்கள் இழந்துவிடக்கூடாது என்பதே என் கவலை என்று தெரிவித்துள்ளார்.


— P. Chidambaram (@PChidambaram_IN) May 2, 2022

இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் தவறான உறுதிமொழியை மாணவர் தலைவர் வாசித்து அதை மாணவர்கள் ஏற்ற நிகழ்ச்சி கண்டனத்திற்குரியது. இச்சம்பவம் வருத்தம் அளித்தது. மருத்துவக் கல்லூரி டீனுக்குத் தெரிவிக்காமல் மாணவர் பேரவைத் தலைவர் இந்தத் தவறைச் செய்திருக்கிறார் என்று பல மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

டீன் ரெத்தினவேலு, கரோனா காலத்தில் சிவகங்கை தலைமை மருத்துவமனையில் மிகச் சிறப்பாகப் பணியாற்றினார் என்பதை நானும் சிவகங்கை மாவட்ட மக்களும் அறிவோம். அவருக்குத் தெரியாமல் இந்தப் பிழை நடந்திருந்தால் அவரைப் பொறுப்பாக்கக் கூடாது. ஒரு நல்ல, மூத்த மருத்துவரின் சேவையை மக்கள் இழந்துவிடக்கூடாது என்பதே என் கவலை” என்று பதிவிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.