சென்னை: “பெரும்பான்மைவாதமும் மதவாதமும் தலைதூக்காத சமய நல்லிணக்கப் பூங்காவாகத் தமிழகத்தைக் காத்து நிற்கும் “திராவிட மாடல்” ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஒற்றுமையுணர்வும் சகோதரப் பாசமும் நிலைத்திருப்பதால்தான் தமிழகம் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது“ என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ரமலான் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: “புனித ரமலான் மாதம் முழுவதும் தங்கள் நோன்புக் கடமையை ஆற்றி, ஏழை எளியவருக்கு உதவிகள் புரிந்து, அன்பு, இரக்கம், கருணை, ஈகை ஆகிய உயரிய பண்புகளை உலகுக்கு வெளிப்படுத்தும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நபிகளார் போதித்த உயரிய வாழ்க்கை நெறிகளையும் பண்புகளையும் கடைப்பிடித்து ஒழுகும், ஈகைப் பண்பின் இன்னுருவாக விளங்கும் இஸ்லாமியப் பெருமக்களுடன் என்றும் தோளோடு தோள் நிற்கும் இயக்கம் திராவிட இயக்கம்.
அவர்களது உற்ற தோழனாக, சிறுபான்மையினரின் காவலராக, அவர்களில் ஒருவராகவே மறைந்த முதல்வர் கருணாநிதி விளங்கினார். எண்ணற்ற நலத்திட்டங்களைக் திமுக ஆட்சி அமைந்தபோதெல்லாம் சிறுபான்மையினர் நலனுக்காக நிறைவேற்றினார். அவருக்கும், இஸ்லாமிய சமுதாயத்தினருக்குமான உறவு என்றைக்கும் நீடித்து நிலைத்து நிற்கவல்லது. அந்த உறவின் தொடர்ச்சியாகத்தான் திமுக அரசும் சிறுபான்மை மக்களின் அரணாகத் தொடர்கிறது.
முதல்முறையாக 5 மாவட்டங்களில் மாவட்ட சிறுபான்மை நல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்துக்கு ஒரு மகளிர் சங்கம் என்பதைத் தளர்த்தி, ஒன்றுக்கும் மேற்பட்ட மகளிர் உதவும் சங்கங்கள் ஆரம்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மைவாதமும் மதவாதமும் தலைதூக்காத சமய நல்லிணக்கப் பூங்காவாகத் தமிழகத்தைக் காத்து நிற்கும் “திராவிட மாடல்” ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஒற்றுமையுணர்வும் சகோதரப் பாசமும் நிலைத்திருப்பதால்தான் தமிழகம் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.
இஸ்லாமிய மக்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்காகப் பல திட்டங்களை அளிக்கும், அவர்களுக்கு ஒரு சோதனை என்றால் அவர்களுக்குத் துணை நிற்கும் காவலாக விளங்கி வரும் தமிழக அரசின் சார்பில் மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் எனது புனித ரமலான் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.