இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பானது சர்வதேச உணவு மற்றும் விருந்தோம்பல் கண்காட்சியை (AAHAR) நடத்தி வருகிறது. இந்த நிகழ்வில் பல நாடுகளிலும் உள்ள மக்கள் பங்கேற்று, அந்தந்த நாட்டு உணவு பொருட்களை காட்சிபடுத்துவதோடு விற்பனை செய்வர். இந்நிலையில் 2022-ம் ஆண்டிற்கான 36-வது கண்காட்சி புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் அனைத்து வயதினருக்கும் 5 ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரை, மலிவு விலையில் பல்வேறு சிறுதானிய உணவு பொருட்களை அறிமுகப்படுத்தியிருந்தது, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA). அபீடாவால் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து சிறுதானிய தயாரிப்புகளும் 100% இயற்கை தன்மையுடன் குளுட்டன் இல்லாத தயாரிப்புகளாக இருந்தது.
குளுட்டன் என்பது பசைத்தன்மை நிறைந்த ஒரு வகை புரதம். பெரும்பாலும் கோதுமை, பார்லி போன்ற தானிய வகைகளில் இந்த குளுட்டன் அதிகம் காணப்படும்; ஒட்டும் தன்மை, நெகிழ்வுத் தன்மை மற்றும் மென்று சாப்பிடுவதற்கு எளிதான தன்மை போன்றவை இந்த குளுட்டன் உணவுகளின் இயல்புகள். இதனால் இதை பிரட், பிஸ்கட், ரஸ்க், பேக்கரி உணவு வகைகளில் அதிகம் பயன்படுத்துகிறார்கள். குளுட்டன் உணவுகள் சிலருக்கு ஒவ்வாமையாக இருக்கிறது. இதனால்தான், அபீடா குளுட்டன் இல்லாத சிறுதானியங்களை ஊக்கப்படுத்தி வருகிறது.
கண்காட்சியில், கிரீம் பிஸ்கட், உப்பு பிஸ்கட், பால் பிஸ்கட், ராகி , நிலக்கடலை, வெண்ணெய், சோள உப்புமா, பொங்கல், கிச்சடி மற்றும் சிறுதானிய மால்ட் போன்ற தயாரிப்புகளையும், ரெடி டு ஈட் என்ற நிமிடங்களில் செய்யக்கூடிய உப்புமா, பொங்கல், நூடுல்ஸ், பிரியாணி, கிச்சடி போன்ற தினை தயாரிப்புகளையும் அபீடா அறிமுகப்படுத்தியது. 12 மாநிலங்களில் புவிசார் குறியீடு (Geographical indication- GI) பெற்ற 33 பொருட்களைக் காட்சிக்கு வைத்திருந்தது.