இந்தியாவில் வேலையின்மை விகிதம், மார்ச் மாதம் இருந்த 7.60 சதவீதத்திலிருந்து ஏப்ரல் மாதம் 7.83 சதவீதமாக அதிகரித்துள்ளது என இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) ஞாயிறன்று வெளியிட்டுள்ள தரவில் தெரிவித்துள்ளது.
நகர்ப்புறங்களில் மார்ச் மாதம் 8.28 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் ஏப்ரல் மாதம் 9.22 சதவீதமாக அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் 7.29 சதவீதத்திலிருந்து 7.18 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இந்தியா-வை மாற்றப்போகும் 2 திட்டம்.. டாடா-வின் மாஸ்டர் பிளான்..!
தமிழ்நாட்டில் வேலையின்மை விகிதம்
இந்தியாவில் அதிகபட்சமாக ஹரியானாவில் வேலையின்மை விகிதம் 34.5 சதவீதமாகவும், ராஜஸ்தானில் 28.8 சதவீதமாகவும் உள்ளது. தமிழ்நாட்டில் மார்ச் மாதம் ஆறுதல் அளிக்கும் விதமாக 4.1 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் 3.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
என்ன காரணம்?
விலைவாசி உயர்வால் உள்நாட்டுத் தேவை அல்லது நுகர்வும் குறைந்துள்ளது. கொரோனாவில் இருந்து மீண்டு வரும் பொருளாதாரத்தின் வேகமும் மிகவும் மெதுவாக உள்ளது. இவையே வேலையின்மை அதிகரித்துள்ளதற்கான காரணங்கள் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
சில்லறை பணவீக்கம்
மார்ச் மாதம் சில்லறை பணவீக்கம் 17 மாதங்கள் இல்லாத அளவுக்கு உயர்ந்து 6.95 சதவீதமாக உள்ளது. பணவீக்கம் இன்னும் 7.5 சதவீதம் வரை இது உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெப்போ வட்டி விகிதம்
ஜூன் மாதம் நடைபெற உள்ள நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என சிங்கப்பூர் கேப்பிட்டல் எக்னாமிக்ஸ் பொருளாதார நிபுணர் ஷெல்லா ஷா கூறியுள்ளார். பணவீக்கம் உயருகிறது என்பதற்காக தற்போது பொருளாதாரம் இருக்கும் சூழலில் ரெப்போ வட்டி விகிதத்தை நிலையாக வைத்து இருப்பதும், குறைப்பதும் தவறு என முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.
அரசு வேலையின்மை விகிதத்தை வெளியிடாமல் தவிர்த்து நிலையில் இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையத்தின் இந்த வேலையின்மை விகித தரவை முக்கியமான ஒன்றாக பொருளாதார வல்லுநர்களும், அரசியல் தலைவர்களும் பார்க்கின்றார்கள்.
தொழிலாளர் பங்கேற்பு விகிதம்
தொழிலாளர் பங்கேற்பு விகிதம் வீழ்ச்சியடைந்து வருவதையும் அவர்கள் கவனித்து வருகின்றனர். வேலையில் இருப்பவர்களின் விகிதம் அல்லது உழைக்கும் மக்களிடையே வேலை தேடும் விகிதமும் சென்ற ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது 43.7 சதவீதத்திலிருந்து 39.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் 2016-ம் ஆண்டு 56 சதவீதமாக இருந்த தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 2022-ம் ஆண்டு தொடர்ந்து 17 சதவீதம் வரை குறைந்துள்ளது என்ற இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்ட தகவல்கள் கூறுகிறது.
வேலையின்மை விகிதம் என்றால் என்ன?
வேலையின்மை விகிதம் என்பது வேலையில்லாமல் இருக்கும் தொழிலாளர் சக்தியின் சதவிகிதம். இது ஒரு பின்தங்கிய குறியீடு. பொருளாதார சூழல் எதிர்பார்ப்பதை வித மாறும் சூழலில் இது ஏறும் அல்லது குறையும்.
பொருளாதாரம் மோசமாக இருக்கும்போதும் வேலைவாய்ப்பு பற்றக்குறை இருக்கும் போதும், வேலையின்மை விகிதம் உயரும். பொருளாதாரம் ஆரோக்கியமாக வளரும் போது, வேலைவாய்ப்புகளும் ஒப்பீட்டளவில் ஏராளமாக உருவாகி வேலையின்மை குறையும் என எதிர்பார்க்கலாம்.
India’s Unemployment Rate Rises To 7.83% In April. How About in Tamil Nadu? Report
India’s Unemployment Rate Rises To 7.83% In April. How About in Tamil Nadu? Report | இந்தியாவில் ஏப்ரல் மாதம் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு.. தமிழகத்தில்?