வெப்ப அலை அதிகரித்து வருவதன் காரணமாக, பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றி அமைத்து, மாநில அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
கோடைக் காலம் தொடங்கி விட்டதால் நாடு முழுவதும் வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. நாளை மறுநாள் அக்னி வெயில் தொடங்க உள்ளதால் வெயில் வறுத்தெடுக்கும். இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்தியாவில் வடமேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெப்பம் நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் வழக்கத்தை விட கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. இந்த சூழலில் மாநில அரசுகள், பள்ளி மாணவர்களுக்கு உடனடியாக விடுமுறை அளிக்க வேண்டும் அல்லது பள்ளி நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் மற்றும் சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், வெப்ப அலை காரணமாக,
ஒடிசா
மாநிலத்தில், காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. வெயில் காரணமாக பள்ளிகள் செயல்படும் நேரத்தை இன்று முதல் மாற்றி அமைத்து அம்மாநில அரசு அறிவித்து உள்ளது. எனினும் ஏற்கனவே திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.