திருவாரூர்: குடவாசலில் செயல்படும் அரசினர் கலை அறிவியல் கல்லூரியை வேறு ஊருக்கு இடம் மாற்றக்கூடாது என்று மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்எல்ஏ கோரிக்கை மனு அளித்தார்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குடவாசலில் செயல்பட்டுவரும் டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அரசு கலைக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய கூடாது என வலியுறுத்தி, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ப.காயத்திரி கிருஷ்ணனிடம் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் எம்எல்ஏ இன்று அப்பகுதி அதிமுகவினர் மற்றும் பொதுமக்களுடன் சென்று கோரிக்கை மனு அளித்தார்.
அந்த மனுவில், “கடந்த 28.07.2017ம் ஆண்டு குடவாசலில் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அரசினர் கலைக்கல்லூரி தொடங்கப்பட்டு அங்குள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் செயல்படத் தொடங்கியது. இதற்கான கட்டிடத்தை கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என்பதால், நீதிமன்ற உத்தரவு காரணமாக கட்டுமானம் தாமதம் ஆகிவருகின்றது.
இந்நிலையில், இந்தg கல்லூரியை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ய தொடர்ந்து முயற்சிகள் நடப்பதாக தெரிகின்றது. இதில், ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். கல்லூரியை இடமாற்றம் செய்தால், அவர்கள் படிப்பைத் தொடர முடியாத சூழ்நிலை ஏற்படும். குடவாசல் பகுதியானது கும்பகோணம், வலங்கைமான், கொரடாச்சேரி உள்ளிட்ட பகுதிகளின் மையப்பகுதியில் குடவாசல் உள்ளதால் இந்தக் கல்லூரிக்கு வந்து செல்ல அனைத்து பகுதி மாணவர்களுக்கும் வசதியாக இருக்கும். பல அரசியல் கட்சிகளும், பொதுநல சங்கங்களும், பொதுமக்களும் இந்தக் கல்லூரியை குடவாசலை விட்டு வேறு ஊருக்கு இடமாற்றம் செய்யக் கூடாது என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். எனவே இந்த கல்லூரி குடவாசல் பகுதியிலேயே தொடர்ந்து செயல்பட வேண்டும். இதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
குடவாசல் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றம் செய்யக் கூடாது என வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணனிடம் ஆர்.காமராஜ் எம்எல்ஏ கோரிக்கை மனு அளித்துவிட்டு அக்கல்லூரியின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.