கரூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஓமன் நாட்டில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். அவர், கரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில், அவரின் தந்தை மூலம் ஒரு புகாரை கொடுத்திருந்தார். அந்த புகாரில், “கடந்த 03.02.2022 -ம் தேதி ஃபேஸ்புக்கில் செல்போன் விற்பனை என்ற விளம்பரத்தைப் பார்த்து லிங்கை கிளிக் செய்து அதில் வரும் வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொண்டு செல்போனை ஆர்டர் செய்தேன். அதன்பிறகு, ஓமன் கஸ்டம்ஸ் மற்றும் காவல்துறையில் பேசுவதாக கூறி என்னை மிரட்டி, ரூ.7,01,900/- பணம் பெற்று ஏமாற்றிய நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு தந்தை மூலம் புகார் அளித்துள்ளேன்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனைத்தொடர்ந்து, கரூர் சைபர் க்ரைம் போலீஸார் அந்த புகார் மீது விசாரணை மேற்கொண்டு, வங்கி கணக்கு மட்டும் தொலைபேசி எண்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ததில், இஷா பகதூர் மால்சம், சுராஜித் டெபர்மா ஆகியோர் குற்றச் செயலில் ஈடுபட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக, கரூர் மாவட்ட இணைய குற்றப்பிரிவு ஆய்வாளர் அம்சவேணி தலைமையிலான தனிப்படை போலீஸார் பெங்களூரில் பதுங்கியிருந்த, இருவரையும் அதிரடியாக கைது செய்தனர். பெங்களூரிலிருந்து தமிழகம் அழைத்து வரப்பட்ட இவர்களை, கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். அதோடு, `இணையதளங்கள் மூலம் ஏற்படும் குற்றங்களில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். மேலும், இணையவழி மோசடி தொடர்பாக இலவச தொலைபேசி எண் `1930’ மூலம் புகார் தெரிவிக்கலாம்’ என காவல்துறை அறிவுறுத்தியுள்ளனர்.