புதுடெல்லி: டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் குறைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி ஆர்.கே.ஜெனமணி தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே முந்தைய ஆண்டை விட வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. கோடை தொடங்கியது முதலே உஷ்ணம் வாட்டி வதைக்கிறது. இந்த ஆண்டிலும் விதிவிலக்கில்லாமல் கோடை வெயில் தொடங்கிய ஏப்ரல் முதல் வாரத்திலேயே வெப்பம் உயர்ந்தது. பல்வேறு மாநிலங்களிலும் வெப்பநிலை 40 – 45 டிகிரி செல்சியஸை தொட்டுள்ளது.
டெல்லி, ராஜஸ்தான், ஹரியாணா, உத்தர பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களின் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸுக்கு மேல் பதிவாகியது. கடந்த வாரத்தில் நாட்டில் பரவலாக வெப்பநிலை உயர்ந்து காணப்பட்டது. சில இடங்களில் வெப்ப அலை வீசியது.
இந்தநிலையில் வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் வெப்பம் கணிசமாக குறையும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி ஆர்.கே.ஜெனமணி தெரிவித்துள்ளதாவது:
ஏப்ரல் மாதத்தில் வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் சராசரி அதிகபட்ச வெப்பநிலை முறையே 35.9 மற்றும் 37.78 செல்சியஸ் பதிவாகியுள்ளது. டெல்லி, பஞ்சாப், ஹரியாணா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
நாங்கள் கணித்தபடி ஒடிசா மற்றும் மேற்குவங்காளத்தில் வெப்ப அலை கடந்த ஏப்ரல் 30-ம் தேதி முடிந்துவிட்டது. அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் பலத்த காற்று வீசும். மேகக்கூட்டத்தால் வடமேற்கு இந்தியாவிற்கு மழை வாய்ப்புள்ளது.
டெல்லிக்கு வாய்ப்பு உள்ளது. முக்கியமாக மே 3-ம் தேதி மழை பெய்யும். ராஜஸ்தான், டெல்லி, ஹரியாணா மற்றும் பஞ்சாப் ஆகியவை மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றும் வீசும் மற்றும் மழை பெய்யக்கூடும் இதன் காரணமாக அடுத்த 6-7 நாட்களுக்கு, கிழக்குக் காற்றும் மிகவும் வலுவாக இருக்கும். இதனால் வெப்பநிலை உயராது.
எனவே மே 7-ம் தேதி வரை வெப்ப அலை இருக்காது. வெப்பநிலை எப்படி இருந்தாலும் மே 7-ம் தேதிக்குப் பிறகுதான் சரியான நிலையைப் பெற முடியும். ஆனால் இப்போது மே மாதத்தின் தொடக்கத்தில் நிலைமை நன்றாக உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.