கலிபோர்னியாவில் உள்ள மேற்கு லே பகுதியில் தொழிலதிபர் ஜேம்ஸ் குரி என்பவரின் 17 வயது மகன், சுமார் 100 கி.மீ வேகத்தில் சிக்னல் போட்டதையும் மதிக்காமல் தனது லம்போர்கினி காரில் பயணித்து கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் மோனிக் முனோஸ் (32) என்ற பெண் ஒருவர் இடப்பக்கம் திரும்பும்போது, தொழிலதிபர் மகனின் லம்போர்கினி கார் மோதி உயிரிழந்தார். தொழிலதிபரின் மகன் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து ஏற்படுத்தியது தொழிலதிபரின் மகன் என்பதால் போலீஸார் அந்த சிறுவனை கைது செய்வதில் தாமதம் காட்டியதாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு அவரைக் கைதுசெய்து சிறார் முகாமில் 7-9 மாதங்கள் தங்க வைக்க தண்டனை வழங்கப்பட்டது.
இது தொடர்பாக உயிரிழந்த மோனிக் முனோஸ்வின் குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு சிவில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர்களுக்கு 18.75 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. தொழிலதிபர் ஜேம்ஸ் குரி இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராமில், “உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கார் விபத்திலிருந்து மோனிக் முனோஸை மீட்க முடியாதது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது”’ எனப் பதிவிட்டுள்ளார்.