ஐ.பி.எல். கிரிக்கெட்: தோல்விப்பயணத்துக்கு முடிவுகட்டுமா கொல்கத்தா..?

மும்பை, 
முதல் 4 ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற்று இந்த சீசனை சூப்பராக தொடங்கிய கொல்கத்தா அணி அதன்பிறகு தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோற்று பின்தங்கி நிற்கிறது. எஞ்சிய 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே கொல்கத்தா அணியால் பிளே-ஆப் சுற்று வாய்ப்பு பற்றி நினைத்து பார்க்க முடியும். 

அதனால் ராஜஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் இறங்குகிறது. கொல்கத்தா அணியில் நிறைய நட்சத்திர வீரர்கள் இடம் பெற்றிருந்தாலும் சரியான ஆடும் லெவன் அணியை கண்டறிய முடியாமல் தவிக்கிறார்கள். 
இதுவரை 5 தொடக்க ஜோடியை பயன்படுத்தி பார்த்தும் பலன் கிட்டவில்லை. கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (290 ரன்), நிதிஷ் ராணா (200 ரன்) மட்டுமே தொடர்ந்து நன்றாக ஆடுகிறார்கள். மற்ற வீரர்கள் ‘அவ்வப்போது’ நின்ற நிலையில் இருப்பதால் தான் ஊசலாட்டம் தொடருகிறது. இந்த ஆட்டத்தில் மோசமான நிலைமையை மாற்றி வெற்றிப்பாதைக்கு திரும்புவார்களா என்பதை பார்க்கலாம்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 வெற்றி, 3 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் இருக்கிறது. மும்பைக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் தோல்வியை தழுவியது. ஆனாலும் ராஜஸ்தான் வலுவாகவே இருக்கிறது. பேட்டிங்கில் ஜோஸ் பட்லர் (3 சதம், 3 அரைசதத்துடன் 566 ரன்), தேவ்தத் படிக்கல், கேப்டன் சாம்சன், ஹெட்மயர், ரியான் பராக், பந்து வீச்சில் ஆர்.அஸ்வின் (8 விக்கெட்), யுஸ்வேந்திர சாஹல் (19 விக்கெட்), டிரென்ட் பவுல்ட், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோர் நல்ல நிலையில் உள்ளனர். 
ஏற்கனவே கொல்கத்தாவுக்கு எதிரான தொடக்க லீக்கில் 217 ரன்கள் குவித்து அதன் மூலம் 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்த ராஜஸ்தான் அணி மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் முனைப்புடன் ஆயத்தமாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.