வேலூரில் நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் ஊராட்சி மன்றத்தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராணுவ வீரர் குடும்பத்தினர் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் பொன்னை அருகேயுள்ள என்.பி.என் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் தற்போது பணியிலுள்ள ராணுவ வீரர். இவருக்கு சொந்தமாக அதே கிராமத்தில் உள்ள 10 செண்ட் நிலத்தை அக்கிராமத்தின் ஊராட்சி மன்றத்தலைவராக உள்ள ரமேஷ் என்பவர் ஆக்கிரமிக்க முயற்சித்து வருவதாகக்கூறி ஏற்கெனவே ஜெயச்சந்திரன் கடந்த 16-3-22 அன்று பொன்னை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். ஆனால் காவல்துறை உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று கூறுகிறார்.
இந்நிலையில், ரமேஷ் மீண்டும் நேற்றிரவு 20-க்கும் மேற்பட்ட அடியாட்களுடன் வந்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும், இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்ட முயற்சிப்பதாகவும் கூறி, தங்களது நிலத்தை பாதுகாக்கவும், ஊராட்சி மன்றத்தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் இன்று பொன்னை காவல் நிலையம் முன்பாக ஜெயச்சந்திரன் குடும்பத்தினர் முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பியதுடன், திடீரென தீக்குளிக்க முயன்றுள்னர். இவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM