வாஷிங்டன்: பராக் அகர்வாலுக்குப் பதிலாக எலான் மஸ்க் புதிய ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ளார். 44 பில்லியன் டாலருக்கு மஸ்க்கிடம் விற்க ட்விட்டர் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. ட்விட்டர் நிறுவனம் கைமாறும் நிலையில் இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் கருத்து தெரிவித்து இருந்தார்.
ஊழியர்களின் கூட்டம் ஒன்றில் பேசிய பாரக் அகர்வால் கூறுகையில் ‘‘ட்விட்டர் சமூக ஊடக நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமற்றது. ட்விட்டர் கைமாறும் நிலையில் அது எந்த திசையில் செல்லும் என்று எங்களுக்குத் தெரியாது’’ எனக் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் நிறுவனம் ஊழியர்களின் எண்ணிக்கையை தினமும் கண்காணிக்கும் என்று எலான் மஸ்க் அண்மையில் கூறினார். இதனால் சரியான செலவுக் குறைப்பு நடவடிக்கை இருக்கும் என்ற அச்சமும் ட்விட்டர் ஊழியர்களிடம் உள்ளது. ட்விட்டரில் ஆட்குறைப்பு இருக்குமா என்ற கருத்தும் டவிட்டர் நிறுவன ஊழியர்களிடம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் பராக் அகர்வாலுக்குப் பதிலாக எலோன் மஸ்க் புதிய ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்விட்டர் புதிய தலைமை நிர்வாகியாக பராக் அகர்வாலுக்குப் பதிலாக எலான் மஸ்க் பதவியேற்கக் கூடும் என ஆதாரங்களை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ட்விட்டர் நிர்வாகத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று கடந்த மாதம் ட்விட்டரின் தலைவர் பிரட் டெய்லரிடம் மஸ்க் கூறியதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்தநிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் ட்விட்டரின் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்ட பராக் அகர்வால், மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் வரை அவரது பொறுப்பில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.325 கோடி இழப்பீடு
ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் இந்தியாவில் பிறந்த பராக் அக்ரவால். அவர் மட்டுமின்றி சில ஊழியர்கள் நிறுவனம் கைமாறுவதில் அதிருப்தியில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதுமட்டுமின்றி அவர்கள் பணியில் இருந்து நீக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் பாரக் அகர்வாலை எலான் மஸ்க் பணி நீக்கம் செய்தால் அவருக்கு இழப்பீடாக இந்திய ரூபாய் மதிப்பில் 325 கோடி ரூபாய் வரையிலும் எலான் மஸ்க் வழங்க வேண்டும்.
அவர் பதவியேற்கும்போதே இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பணி வழங்கிய 12 மாதங்களுக்குள் பணிநீக்கம் செய்யப்பட்டால் அவருக்கு அமெரிக்க டாலரில் 42 மில்லியன் வழங்க வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.