சிறுமியைத் திருமணம் செய்து துன்புறுத்திய இளைஞர்! – போக்சோவில் கைது செய்த போலீஸ்

சென்னை அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் வசித்து வந்த 15 வயது சிறுமி ஒருவரை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த கவியரசன் (23) என்பவர் காதலித்து வந்துள்ளார். பின்னர் சிறுமியை கடந்த 13.12.2021-ம் தேதி ஆசைவார்த்தைகள் கூறி திருமணம் செய்த கவியரசன், அவருடன் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், சிறுமி கர்ப்பமான பின்னர், கவியரசன் சரியாக வேலைக்குச் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால் சிறுமிக்கும் கவியரசனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கவியரசன், சிறுமியை அடித்து துன்புறுத்தியுள்ளார். அதனால் கவியரசனைப் பிரிந்த சிறுமி, தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

கைது

இதையடுத்து குழந்தைகள் நல அலுவலகத்தை 1.5.2022-ம் தேதி சிறுமியின் குடும்பத்தினர் தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்தனர். சிறுமியின் வீட்டுக்குச் சென்ற குழந்தைகள் நல அலுவலக உறுப்பினர் ஹேமாவதி, சிறுமி, அவரின் குடும்பத்தினரிடம் விசாரித்தார். பின்னர் அவர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் சிறுமியிடம் விசாரித்தனர். அவர் அளித்த தகவலின்படி கவியரசனிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் மீது போக்சோ, குழந்தை திருமண தடைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் கவியரசனைக் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கவியரசன், சிறையில் அடைக்கப்பட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.