சினிமா ஷூட்டிங்கில் ஏற்பட்ட முதுகுவலியால் மூத்த நடிகர் ‘அட்மிட்’ – 4 நாட்கள் சிகிச்சைக்கு பின் ‘டிஸ்சார்ஜ்’

மும்பை: முதுகுவலியால் அவதிப்பட்டு வந்த மூத்த நடிகர் தர்மேந்திரா, 4 நாட்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். பழம்பெரும் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா (86), கடந்த நான்கு நாட்களுக்கு முன் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் திடீர் உடல் நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக நான்கு நாட்களுக்கு முன்பு நடந்த சினிமா படப்பிடிப்பின் போது ஏற்பட்ட முதுகுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாக வட்டாரங்கள் கூறுகையில், ‘நடிகர் தர்மேந்திரா கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி’ என்ற படத்தின் படப்பிடிப்பில் இருந்த போது, உடற்பயிற்சி செய்யும் போது அவருக்கு முதுகுவலி பிடிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் ஐசியூவில் அனுமதிக்கப்படவில்லை. டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், தற்போது வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்’ என்று தெரிவிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.