புதுடெல்லி: பிரதமர் அலுவலத்தின் திட்டமிட்ட சதி செயல் காரணமாக தன்னை அசாம் போலீசார் கைது செய்ததாக குஜராத் சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி தெரிவித்துள்ளார். குஜராத்தின் பனாஸ்கந்தாவில் உள்ள வத்காம் தொகுதி சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி. இவர் பிரதமர் மோடியை விமர்சித்து டிவிட்டரில் கருத்து பதிவிட்டு இருந்தார். இதுதொடர்பாக, புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து கடந்த 19ம் தேதி அவரை அசாம் போலீசார் கைது செய்தனர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆனால் அடுத்த சில மணி நேரத்திலேயே பெண் காவலரை தாக்கியதாக மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் பார்பெட்டா நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இது தொடர்பாக நேற்று மேவானி அளித்த பேட்டியில், ‘‘என்னுடைய கைது நடவடிக்கை 56 இன்ச் கோழைத்தனமான செயல். அசாம் போலீசார் என்னை கைது செய்தது பிரதமர் அலுவலகத்தினால் வடிவமைக்கப்பட்ட திட்டமிட்ட சதியாகும். குஜராத் முந்த்ரா துறைமுகத்தில் ரூ.1.75லட்சம் கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது, உனாவில் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மை பிரிவினருக்கு எதிராக பதியப்பட்டு அனைத்து வழக்குகளையும் நீக்க கோரி ஜூன் 1ம் தேதி குஜராத்தில் பந்த் நடத்தப்படும்’’ என்றார்.மதிய உணவில் இறைச்சி நீக்கம் ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு: புதுடெல்லி: லட்சத்தீவில் பள்ளிகளுக்கான மதிய உணவில் இருந்து இறைச்சி உணவுகள் நீக்கியதற்கு எதிராக தொடரப்பட்ட மனுவில் ஒன்றிய அரசு பதிலளிக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லட்சத்தீவின் நிர்வாகியாக பிரபுல் கோடா பொறுப்பேற்ற பின், கால்நடை துறை சார்பில் நடத்தப்பட்டு வந்த பால் பண்ணைகளை மூடுவது அவரது முக்கிய நோக்கமாக இருப்பதாக புகார் எழுந்தது. மேலும் பள்ளிகளில் மதிய உணவில் சிக்கன் மற்றும் இறைச்சி உணவுகளை பயன்படுத்தவும் நிர்வாகம் தடை விதித்தது. இந்த நடவடிக்கை தீவில் இருப்பவர்களின் உணவு முறையில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறி கவராத்தியை சேர்ந்த அஜ்மல் அகமது என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை உயர்நீதிமன்றம், கடந்த செப்டம்பரில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அவர், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் ஏஎஸ் போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு, இது தொடர்பாக ஒன்றிய அரசு, லட்சத்தீவு நிர்வாகம் பதிலளிக்கும்படி உத்தரவிட்டனர்.4 மாணவர்களிடம் ஓரினச்சேர்க்கை பாதிரியாருக்கு 18 ஆண்டு சிறை: திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் தாமஸ் (58). கொட்டாரக்கரையில் உள்ள ஹோலிகிராஸ் ஆலயத்திலும், கொல்லம் கோட்டாத்தலை செயின்ட் மேரீஸ் ஆலயத்திலும் பாதிரியாராக இருந்தார். கடந்த 2016ம் ஆண்டில் கொட்டாரக்கரை ஹோலி கிராஸ் ஆலயத்தில் பாதிரியாராக இருந்தார். இந்த ஆலயத்தை ஒட்டி ஒரு கிறிஸ்தவ மத பாடசாலை உள்ளது. இங்கு ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு படித்து வந்த 4 மாணவர்களை பாதிரியார் தாமஸ் தனது அறைக்கு அழைத்து சென்று மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தி உள்ளார். இதுகுறித்து திருவனந்தபுரம் சிறுவர் நல ஆணையத்திற்கு புகார் வந்தது. இது குறித்த விசாரணையில் பாதிரியார் தாமஸ் மாணவர்களை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இது தொடர்பாக புனலூர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து பாதிரியார் தாமசை கைது செய்தனர். இந்த வழக்கு கொல்லம் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுஜித், பாதிரியார் தாமசுக்கு 18 வருடம் கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.பாஜ அரசின் தவறான நிர்வாகத்தால் நாடு சீரழிந்தது பற்றி பாடமே எடுக்கலாம்- ராகுல்காந்தி தாக்கு: புதுடெல்லி: ‘பிரதமர் மோடி அரசின் தவறான நிர்வாகத்தால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்தது குறித்து ஆய்வு படிப்பே மேற்கொள்ளலாம்’ என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக, மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு பல மாநிலங்களில் பல நேர மின்வெட்டு அமலுக்கு வந்துள்ளது. இதனால் பொதுமக்களும், தொழில் துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராகுல்காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘மின் நெருக்கடி, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்க நெருக்கடி என நாட்டில் அனைத்து பிரச்னைகளும் நிலவுகின்றன. உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருந்த நாடு, பிரதமர் மோடி அரசின் 8 ஆண்டுக்கால தவறான நிர்வாகத்தின் காரணமாக எப்படி சீர்குலைந்தது என்பது குறித்து ஆய்வு படிப்பையே மேற்கொள்ளலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.