புதுடெல்லி: வைர வர்த்தகர் மெகுல் சோக்ஸி மீது மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) புதிய வழக்கை பதிவு செய்துள்ளது.
பொதுத்துறை நிறுவனமான ஐஎப்சிஐ லிமிடெட் நிறுவனத்திடம் ரூ. 22.6 கோடி மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த மோசடி 2014-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையான காலத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நீண்ட கால முதலீட்டுத் தேவைக்காக ஐஎப்சிஐ லிமிடெட் நிறுவனத்திடம் 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ. 25 கோடி தொகையை நிறுவன கடனாகப் பெற்றுள்ளார்.
மெகுல் சோக்சியின் நிறுவனமான கீதாஞ்சலி ஜெம்ஸ் லிமிடெட் (ஜிஜிஎல்) நிறுவனம் சார்பில் இந்த கடன் தொகை பெறப்பட்டுள்ளது. இந்த கடன் தொகைக்கு ஈடாக நகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நகைகளை சூரஜ்மல் லல்லுபாய் அண்ட் கம்பெனி, நரேந்திரஜவேரி, பிரதீப் ஷா மற்றும் ஷெரெனிக் ஷா ஆகிய நிறுவனங்கள் மதிப்பீடு செய்துள்ளன. ஈடாகஅளிக்கப்பட்டவற்றின் மதிப்பைவிட இருமடங்கு தொகை அளிக்கப்பட்டுள்ளது. பங்கு பத்திரம், தங்கம் மற்றும் வைர நகைகள் ஈடாக அளிக்கப்பட்டன. ஆனால் மதிப்பீடு செய்த நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்களை குற்றவாளிகளாக சிபிஐ குறிப்பிட்டுள்ளது.
கடனாக பெற்ற தொகையை திரும்ப செலுத்தத் தவறியதால். ஐஎப்சிஐ நிறுவனத்திடம் ஈடாக வைத்திருந்த 20,60,054 பத்திரங்களை விற்பனை செய்ய முடிவு செய்தது. ஆனால் 6,48,822பங்குகளை மட்டுமே ரூ. 4.07 கோடிவிலையில் விற்க முடிந்தது. மேற்கொண்டு பங்குகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. என்எஸ்டிஎல் இந்த தடையை விதித்திருந்ததால் பங்குகளை விற்க முடியவில்லை.
இதனால் சோக்சியும் அவரதுநிறுவனமும் ஐஎப்சிஐ நிறுவனத்துக்கு ஒட்டுமொத்தமாக ஏற்படுத்திய நஷ்டம் ரூ. 22.06 கோடி என குறிப்பிட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று திரும்ப செலுத்தாத சூழலில் நாட்டை விட்டு ஆன்டிகுவா மற்றும் பர்முடாவுக்கு தப்பியோடி தலைமறைவானார் மெகுல் சோக்சி. பஞ்சாப் நேஷனல்வங்கியில் இவர் மோசடி செய்தரூ.6,097 கோடி தொகை குறித்தவிவரம் 2018-ம் ஆண்டு வெளிச்சத்துக்கு வந்தது. இது தவிர இவரது மற்றொரு நிறுவனமான ஆஸ்மிஜூவல்லரி செய்த ரூ.942 கோடிமோசடி வழக்கு குறித்த விசாரணையும் தனியாக நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு மே மாதம் சோக்சியை டொமினிக்கன் தீவில் கண்டு பிடித்தனர். அங்கிருந்து அவரை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆன்டிகுவா நாட்டு பிரஜை உரிமையை அவர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.