காதலியை அழைத்துச் செல்ல மோட்டார் சைக்கிள் வாங்கி தரக் கேட்டு கூலி வேலை பார்க்கும் தந்தையிடம் அடம் பிடித்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவன், குடும்ப சூழ் நிலையை புரிந்து கொள்ளாமல் உயிரை மாய்த்துக் கொண்ட விபரீத சம்பவம் அரங்கேறி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பாரதியார் தெருவில் வசித்து வருபவர் கூலிதொழிலாளி கன்னியப்பன். இவரது மகன் 19 வயதான நாகராஜ் ,செங்கல்பட்டு அருகே ஆத்தூர் பகுதியில் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்து வந்த நாகராஜ், தனது காதலியை அழைத்துச் செல்ல புதிதாக பைக் வாங்கி தரும்படி தந்தை கன்னியப்பனிடம் கேட்டு அடம்பித்துள்ளார். தந்தை கன்னியப்பனோ, தான் ஆன்றாடம் வேலைக்கு சென்றால் தான் வீட்டில் உள்ளோருக்கு சாப்பாடு, என்கிற நிலையில் படிப்புக்கும் பணம் செலவழித்து, கூடவே மோட்டார் சைக்கிளும் வாங்கினால் அதற்கு நிறைய பணம் தேவைப்படும் என்றும் எல்லாவற்றுக்கும் மேலாக அதற்கு மாத தவனையுடன், பெட்ரோலுக்காகவே தனியாக ஒரு தொகை கையில் இருக்க வேண்டும் என்பதை எல்லாம் மகனிடம் எடுத்து கூறி மோட்டார் சைக்கிள் வாங்கி தர மறுத்ததாக கூறப்படுகின்றது.
தனது தந்தையின் வருமானத்தையும் , குடும்ப சூழ் நிலையையும் புரிந்து கொள்ள்ளும் நிலையில் இல்லாத ஊதாரி மாணவரான நாகராஜோ, தான் ஆசைப்பட்ட மோட்டார் சைக்கிளை வாங்கித்தரவில்லையே என்று யாரிடமும் பேசாமல் இருந்துள்ளான். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விபரீத முடிவெடுத்த நாகராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது.
தகவல் அறிந்து விரைந்து வந்த மறைமலை நகர் காவல் துறையினர் , நாகராஜின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.