பீஜிங் : நம் அண்டை நாடான சீனாவின் ஷாங்காய் நகரில், மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை அடுத்து, ஒரு மாதத்திற்கு முன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் நான்கு வாரங்களாக வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்நிலையில், ஷாங்காயில் கொரோனா தொற்று அறவே இல்லாத சூழலை ஏற்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது.இதற்காக, கொரோனா அறிகுறியால் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் பஸ்களில் வலுக்கட்டாயமாக ஏற்றப்படுகின்றனர். அங்கிருந்து, 400 கி.மீ., தொலைவில் உள்ள அன்உய் மாகாணத்திலிருக்கும் ‘ரெடிமேடு’ அறைகளில் தங்க வைக்கப்படுகின்றனர்.
இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் அதிகம் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் பாதிப்பற்றவர்களையும் போலீசார் அன்உய் மாகாண முகாம்களில் அழைத்துச் சென்று தங்க வைக்கின்றனர்.
இது குறித்து முகாமில் அடைக்கப்பட்ட லுாசி என்ற பெண் கூறியதாவது:எங்கள் குடியிருப்பில் பாதிக்கப்பட்டோர் அதிகம் இருந்தனர். அதன் காரணமாகவே என்னைப் போன்றவர்கள் பாதிக்கக்கூடாது எனக் கூறி போலீசார் இங்கு கொண்டு வந்து அடைத்து விட்டனர். நான் எப்போது வீடு திரும்புவேன் என தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement