இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற கோரிககியை ஏற்றுக்கொண்டதற்கு மத்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வரலாறு காணாத அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், இலங்கையில் உள்நாட்டுப் போர்க்காலங்களில் மக்கள் அகதிகளாக வெளியேறியதைப் போல, இந்த பொருளாதார நெருக்கடியாலும் வாழ வழியில்லாமல் அகதிகளாக தமிழகத்தை நோக்கி வந்துகொண்டுள்ளனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு, பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கும் இலங்கை மக்களுக்கும் உதவ உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப முன்வந்தது. அவற்றை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப் பேரவையில், அண்மையில் தீர்மாணம் நிரைவேற்றபட்டது. மேலும், இலங்கை மக்களுக்கும் உதவ அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார்.
இதையடுத்து, முதலமைச்சரின் கடிதத்துக்கு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து இலங்கைக்கு உதவலாம், தேவைப்பட்டால், தமிழக அரசின் இணைச் செயலாளரை இலங்கைக்கு அனுப்பலாம் என்று பதில் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற கோரிககியை ஏற்றுக்கொண்டதற்கு மத்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்கு, மாண்புமிகு மத்திய அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் எனது நன்றி. இந்த மனிதாபிமானச் செயலானது அனைவராலும் பெரிதும் வரவேற்கப்பட்டு நாடுகளுக்கிடையே அரவணைப்பு மற்றும் நல்லுறவை மேம்படுத்த உதவும் என்பதில் உறுதியாக உள்ளேன். அனைத்துத் துறைகளிலும் நல்லெண்ணம் வளரட்டும்.” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“