“தியாக மனப்பாங்குடன் செயற்படுமாறு நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்” –  பிரதமர்

“பிறர் குறித்த உணர்வுடன் தியாக மனப்பாங்குடன் செயற்படுமாறு நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ,புனித ரமழான் நோன்புப்பெருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் புனித ரமழான் நோன்புப்பெருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தி பின்வருமாறு:

ரமழான் தின செய்தி – 2022 மே 03

உலகம் முழுவதும் பரந்து வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்து ஈத்-உல்-ஃபிதர் பெருநாளைக் கொண்டாடும் இலங்கையிலுள்ள அனைத்து இஸ்லாமிய சமூகத்தினருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இஸ்லாம் நாட்காட்டியின் மிக முக்கியமான மாதத்தில், உங்கள் வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்காக உலக வாழ்க்கையிலிருந்து சற்று ஒதுங்கி ஆன்மீக சடங்கு முறைகளை நிறைவேற்றுவது ஒரு சிறந்த பணியாகும்.

அதற்காக இந்த ரமழான் நோன்பு காலத்தில் நீங்கள் அனைவரும் நற்செயல்களில் மாத்திரம் கவனம் செலுத்துவது பாராட்டுக்குரிய விடயமாகும்.

பட்டினியால் வாடும் ஒருவரின் வலியைப் புரிந்துகொள்வதும், தியாக வாழ்வின் மதிப்பை உணர்வதும் இந்த நோன்பு காலத்தில் நீங்கள் பெறும் விலைமதிப்பற்ற வாழ்க்கை மதிப்புகளாகும்.

அல் குர்ஆனின் கூற்றுக்கு அமைய ரமழான் நோன்புடன் தொடர்புடைய உன்னத நற்பண்புகளைப் பின்பற்றி அந்த நோன்பு காலத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்த உங்களுக்கு அதன் ஆன்மீக சாரத்தை சமூகமயமாக்குவதற்கான சந்தர்ப்பம் தற்போது உதயமாகியுள்ளது என்பது எனது நம்பிக்கை.

முழு நாடும் சவால்மிக்கதோர் காலகட்டத்திலுள்ள இத்தருணத்தில் சமூகத்தில் உள்ள பிறர் குறித்த உணர்வுடன் தியாக மனப்பாங்குடன் செயற்படுமாறு நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் ஆசீர்வாதம் நிறைந்த இனிய ஈத்-உல்-ஃபிதர் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மஹிந்த ராஜபக்க்ஷ
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின்
பிரதமர்

பிரதமர் ஊடக பிரிவு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.