ஒடிசாவில் காலை 6:00 மணிக்கு பள்ளி திறப்பு

புவனேஸ்வர் : ஒடிசாவில், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, காலை 6:00 முதல் 9:00 மணி வரை பள்ளிகள் நடத்தப்படுகிறது.

ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில், பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது.இம்மாநிலத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்ததை அடுத்து, பள்ளிகளுக்கு கடந்த வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின், நேற்று முதல் வகுப்புகள் காலை 6:00 மணிக்கு துவங்கின.

இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் பி.பி.சேத்தி கூறியதாவது:ஒடிசாவில், கொரோனா பாதிப்பால் பள்ளி மாணவர்களின் கற்றல் இழப்பை ஈடுசெய்ய, கோடை விடுமுறை நாட்களை குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.இந்த மாதத்தில், காலை 8:30 மணிக்கு வெயிலின் அளவு, 32 முதல் 34 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகும் என, வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. எனவே, மாணவர் நலன் கருதி பள்ளிக்கூட வகுப்புகளை காலை 6:00 முதல் 9:00 மணி வரை நடத்த முடிவு செய்யப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

காலை 9:00 மணிக்கு, வெயிலின் அளவு 35 டிகிரி செல்ஷியஸ் தாண்டாது என, நம்புகிறோம். இதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மாணவர்களுக்கு உணவு வழங்கிய பின், காலை 9:00 மணிக்கு மூடப்படும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்வரை, இந்த நிலை தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.