ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.
ஜலோரி கேட் பகுதியில் ரமலான் பண்டிகைக்கு ஒலிபெருக்கி, கொடி ஆகியவை கட்டப்பட்டிருந்தது. அப்போது, பரசுராம் ஜெயந்திக்காக மற்றொரு சமூகத்தினர் கொடி கட்ட முயன்ற நிலையில், இருதரப்பினர் இடையே மோதல் மூண்டது.
வாக்குவாதம் கலவரமாக மாறி ஒருவருக்கு ஒருவர் கல்வீசி தாக்கிக் கொண்ட நிலையில், போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர். கல் வீச்சு தாக்குதலில் போலீசார் 4 பேர் காயமடைந்தனர்.
மோதல் சம்பவத்தை அடுத்து தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால், வதந்திகள் பரவுவதை தடுக்க, ஜோத்பூரில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
நிலைமை குறித்து டி.ஜி.பி. உள்ளிட்ட உயர் மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், பொதுமக்கள் அமைதி காக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.