கோவை: பாடப்புத்தகங்களில் மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று மாற்றம் செய்வதைக் கைவிட வேண்டும் என பாஜக மகளிர் அணி தேசியத் தலைவரும் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று (மே 3) அவர் வெளியிட்ட அறிக்கையில், ”திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் அனைவரும் மத்திய அரசை, ‘ஒன்றிய அரசு’ என்று பேசவும், எழுதவும் தொடங்கினர். திமுக கூட்டணி கட்சித் தலைவர்களும், ‘ஒன்றிய அரசு’ என்ற சொல்லையே பயன்படுத்தி வருகின்றனர். மத்திய அரசை, ‘ஒன்றிய அரசு’ என்று சொல்வதில் பாஜகவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. மத்திய அரசை, எந்தப் பெயரில் அழைத்தாலும் அரசியலமைப்பு சட்டப்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறையப் போவதில்லை.
ஆனால், தங்களின் அரசியல் ஆதாயத்துக்காக, மக்களிடம் பிரிவினை சித்தாந்தத்தை விதைக்கும் உள்நோக்கத்துடன் பயன்படுத்தி வரும் ‘ஒன்றிய அரசு’ என்ற சொல்லாடலை, பாடப்புத்தகங்களிலும் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக வந்திருக்கும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும் இந்த செயல் கடும் கண்டனத்துக்குரியது. அரசியலமைப்பு சட்டத்தின்படி, மத்திய அரசுக்கு இருக்கும் அதிகாரங்கள், பொறுப்புகள் பற்றி, தவறாக பள்ளிக் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பது என்பது, அவர்களின் மனதைக் கெடுக்கும் செயல். திமுகவினர் தங்களின் அரசியல் விளையாட்டை, அரசியலோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
தங்களிடம் ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதற்காக, தாங்கள் என்ன நினைக்கிறார்களோ அவற்றையெல்லாம் திமுக அரசு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியே, பள்ளி பாடப்புத்தகங்களில், ‘மத்திய அரசு’ என்பதற்குப் பதிலாக ‘ஒன்றிய அரசு’ என்று திருத்தம் செய்வது. இது, திமுகவின் அரசியல் அதிகார ஆணவத்தையே காட்டுகிறது. திமுக அரசாக, திமுகவின் பிரிவினை சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கான அரசாக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கான அரசாக செயல்பட வேண்டும். பாடப்புத்தகங்களில் ஒன்றிய அரசு என்று மாற்றம் செய்வதை கைவிட வேண்டும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.