குஜராத் காங்கிரஸிலிருந்து விலகும் ஹர்திக் பட்டேல்… எந்தக் கட்சியில் இணையப் போகிறார்?

குஜராத் மாநிலத்தில், இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருப்பதால், அங்கு அரசியல் களம் பரபரக்கத் ஆரம்பித்திருக்கிறது. பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தேர்தல்களுக்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியிருக்கின்றன. இந்த நிலையில், குஜராத் மாநில காங்கிரஸின் செயல் தலைவராக இருந்த ஹர்திக் பட்டேல் கட்சியிலிருந்து விலகப்போவதாகச் செய்திகள் வெளியாகிப் பரபரப்பை உண்டாக்கியிருக்கின்றன.

யார் இந்த ஹர்திக் பட்டேல்?

குஜராத் மாநிலத்திலுள்ள ஓ.பி.சி சமூகங்களுள் ஒன்றான பட்டிதார் சமூகத்தைச் சேர்ந்தவர்தான் ஹர்திக் பட்டேல். 2012-ம் ஆண்டு `சர்தார் பட்டேல் குழு’ என்ற ஓ.பி.சி பிரிவினருக்கான அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார் ஹர்திக். அந்த அமைப்பின் மூலம் குறுகிய காலத்தில் குர்மி, பட்டிதார் உள்ளிட்ட பட்டேல் சமூக இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். 2015-ம் ஆண்டு இந்த அமைப்பிலிருந்து வெளியேறியே ஹர்திக், ஓ.பி.சி மக்களுக்கான இட ஒதுக்கீட்டுக்காக மிகப்பெரிய பேரணியையும், போராட்டத்தை முன்னெடுத்தார். 2015 ஜூலை மாதத்தில் தொடங்கிய ஹர்திக்கின் போராட்டம், ஆகஸ்ட் மாதத்தில் குஜராத்திலுள்ள ஓ.பி.சி மக்கள் மத்தியில் பரவியது. அகமதாபாத்திலுள்ள திடல் ஒன்றில், ஏராளமான ஓ.பி.சி மக்கள் ஹர்திக் படேலின் போராட்டத்தில் கலந்துகொண்டதால், குஜராத் மாநிலமே ஸ்தம்பித்தது.

ஹர்திக் பட்டேல்

கூட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்த, போராட்டம் கலவரமானது. கலவரத்தைக் கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதோடு, ராணுவப் படைகளின் உதவியும் கோரப்பட்டது. ஹர்திக் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார். இதன் மூலம் ஓ.பி.சி பிரிவினர் மத்தியில் கொண்டாடப்படும் தலைவராக மாறினார் ஹர்திக். 2017 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்தார். 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸில் இணைந்து, தீவிரப் பிரசாரங்கள் மேற்கொண்டார். ஹர்திக் மீதிருந்த கலவர வழக்கு ஒன்றில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால், நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. தொடர்ந்து, 2020-ம் ஆண்டு குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார் ஹர்திக்.

காங்கிரஸிலிருந்து விலகும் ஹர்திக்?

நேற்று தனது ட்விட்டர் பக்கத்தின் பயோ-டேட்டாவிலிருந்து `காங்கிரஸ் செயல் தலைவர்’ என்ற விஷயத்தை நீக்கியிருக்கிறார் ஹர்திக். கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸிலிருந்து விலகும் சில தலைவர்கள், அதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாக ட்விட்டர் பக்கத்தின் பயோவிலிருந்து தங்களது காங்கிரஸ் கட்சிப் பொறுப்புகளை நீக்குவதை வாடிக்கையாக வைத்திருந்தார்கள். தற்போது ஹர்திக் படேலும் அதே பாணியைப் பின்பற்றியிருப்பதால், அவரும் காங்கிரஸிலிருந்து விலகப் போகிறாரா என்ற சந்தேகங்கள் கிளம்பியிருக்கின்றன.

ஹர்திக் பட்டேல்

கடந்த சில மாதங்களாகவே தனக்குக் குஜராத் மாநில காங்கிரஸில் முக்கியத்துவம் கிடைப்பதில்லை என்பதைச் சில பேட்டிகளில் சொல்லிவந்தார் ஹர்திக். இருந்தும், காங்கிரஸ் தலைமை பற்றி அவர் எந்தவொரு அதிருப்தியும் தெரிவிக்கவில்லை. இதையடுத்து குஜராத் மாநில ஆம் ஆத்மி தலைவர் கோபால் இத்தாலியா, “அர்ப்பணிப்போடு வேலை செய்பவர்களுக்குக் காங்கிரஸ் கட்சியில் இடமிருக்காது. எனவே, ஹர்திக் பட்டேல் ஆம் ஆத்மியில் இணைந்து செயல்பட வேண்டும்” என்று அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில், ஹர்திக் பட்டேல் காங்கிரஸிலிருந்து விலகப் போவதாகச் செய்திகள் கசிந்திருக்கின்றன. அவர், `ஆம் ஆத்மியில் இணையப் போகிறாரா… இல்லை, பா.ஜ.க-வில் இணையப் போகிறாரா?’ என்ற கேள்விகளும் குஜராத் அரசியல் அரங்கில் எழுந்திருக்கின்றன.

எந்தக் கட்சியில் இணைவார்?

இது குறித்து குஜராத் அரசியலை உற்று நோக்கும் சிலர், “குஜராத் அரசியலில் ஓ.பி.சி பிரிவினரின் வாக்குகள் முக்கியமானவை. அந்த வகையில் ஹர்திக், காங்கிரஸிலிருந்து விலகினால், அது அந்தக் கட்சிக்குப் பின்னடைவாகத்தான் அமையும். பஞ்சாப்பைத் தொடர்ந்து குஜராத்திலும் கால்பதிக்க நினைக்கும் ஆம் ஆத்மி, ஹர்திக் படேலுக்கு வெளிப்படையாகவே அழைப்பு விடுத்திருக்கிறது. எனவே ஆம் ஆத்மியின் பக்கம் ஹர்திக் பட்டேல் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ்

அதே வேளையில், அயோத்தி ராமர் கோயில், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து விலக்கப்பட்டது உள்ளிட்ட விவகாரங்களில் பா.ஜ.க-வின் செயல்பாடுகளை வரவேற்றிருந்தார் ஹர்திக். எனவே, அவர் பா.ஜ.க பக்கம் சாயவும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஹர்திக் என்ன செய்யப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்கிறார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.