மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பட்டின பிரவேச விழாவில் ஆதீனத்தை பல்லக்கில் மக்கள் தூக்கிச்சென்று வீதியுலா செல்வது வழக்கம்.
ஆனால், மனிதரை, மனிதர்கள் தூக்கிச்செல்வதை தடை செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இந்நிலையில், மயிலாடுதுறை உதவி கலெக்டர் பாலாஜி, பட்டின பிரவேசம் விழாவில் ஆதீனத்தை மனிதர்கள் பல்லக்கில் தூக்கி செல்ல தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், 500 ஆண்டுகளாக நடக்கும் பாரம்பரிய நிகழ்ச்சிக்கு தடை விதித்தது வருத்தம் அளிக்கிறது. .முதல்வர் ரகசிய காப்பு எடுப்பதை கூடாது என சொல்வது போல தான் பட்டினபிரவேச நிகழ்ச்சியை கூடாது என சொல்வது. தருமபுரம் ஆதீன மடத்துக்கு ஆளுனர் சென்றதே பல்லக்கில் தூக்கி செல்ல தடை விதிக்க காரணம்.
தருமபுர ஆதீன பட்டின பிரவேச நிகழ்ச்சியை முதல்வர் நேரில் வந்து பார்க்க வேண்டும். சைவத்தையும், தமிழையும் தருமபுர ஆதீனம் பாதுகாத்து வருகிறார். பட்டின பிரவேசத்தை நடத்த முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறேன். உடன்படவில்லை என்றால் சொக்கநாதரிடம் செல்வேன். அரசியல் வேறு ஆன்மிகம் வேறு.
எனது குருவான தருமபுர ஆதீனம் பட்டின பிரவேசத்தை உயிரைக் கொடுத்தாவது, நடத்துவோம். உயிரே போனாலும் பரவாயில்லை, நானே சென்று தருமபுர ஆதீன பல்லக்கை சுமப்பேன். பட்டின பிரவேச நிகழ்வை நடத்த அரசு அனுமதி கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.